மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.12,000 விலை நிர்ணயம் செய்யக் கோரிக்கை

மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.12,000 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்

மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.12,000 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் மு.சு.சுதந்திரராசு கோரிக்கை விடுத்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆண்டுதோறும் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படும். நிகழாண்டில் போதிய மழை இல்லாததால் மஞ்சள் சாகுபடி பெருமளவில் குறைந்து விட்டது. மேலும் பருவம் தவறி கால்வாய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவு மஞ்சள் சாகுபடி செய்யப்படவில்லை. 
இப்போது மஞ்சள் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மஞ்சள் சந்தையைப் பொருத்தவரை ஆந்திர மாநிலம், நிஜாமாபாத் மற்றும் மகாராஷ்டிர மாநிலம், சாங்கரி ஆகிய இடங்களுக்கு அடுத்து ஈரோடு சந்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 
அதே சமயம், தமிழகத்தில் ஈரோட்டைத் தவிர சேலம், திருச்செங்கோடு, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை போன்ற இடங்களிலும் சந்தை நடைபெறுகிறது. 
 மஞ்சள் ஏக்கருக்கு சராசரியாக 15 குவிண்டால் மட்டும் கிடைக்கிறது. 
கடந்த ஓராண்டாக ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை விற்பனையாகிறது. இது போதுமான விலை அல்ல. மஞ்சள் சாகுபடிக்கு 1 ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.75 லட்சம்  வரை செலவாகிறது. அறுவடைக் கூலி பல மடங்கு உயர்ந்து ஆள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. 
விலை வீழ்ச்சி, ஆள் பற்றாக்குறை போன்றவற்றால் வரும் காலத்தில் மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டமாட்டார்கள். விவசாயிகளின் நிலையை உணர்ந்து மஞ்சள் 1 குவிண்டால் ரூ.12,000 என அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆன்லைன் மஞ்சள் வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும். மேலும் உடனடியாக மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும். 
கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவும் நிலையில், விளைவித்த பொருள்களுக்கு உரிய விலையும் கிடைக்கவில்லை.  இதனால் விவசாயிகள் அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வரும் ஜூன் மாதம் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை அனைத்து வங்கிகளும் கடன் வசூல் மற்றும் ஜப்தி, ஏலம் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com