கோபியில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும்

திருப்பூர் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. 
கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள 25 மாண்டல அலுவலர்கள், சத்தியமங்கலம், பவானி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்பட தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் ஆட்சியர் பழனிசாமி பேசியாதவது:
தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
மண்டல அலுவலர்களுக்கு தங்கள் மண்டலத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை மற்றும் சுகாதார வசதி முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச் சாவடி அருகே அரசியல் கட்சி மற்றும் வேட்பாளரின் விளம்பரம் அல்லது அவர்களைச் சார்ந்த விளம்பரத் தட்டிகளும் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து முறையான பயிற்சிகளை எடுத்து அதன் செயல்பாடு குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். 
அதன் மூலம் உதவி தேர்தல் அலுவலர் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்களை பதிவு செய்ய வேண்டும்.
திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் பிற தனியார் அரங்குகளில் முறையாக அனுமதி பெறாமல் நடைபெறும் எந்தக் கூட்டமாக இருந்தாலும் உடனடியாக காவல் துறை மற்றும் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் பணிகள் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 
பின்னர் ஒவ்வொரு மண்டல அலுவலர்களிடமும் தேர்தல் பணி குறித்து இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். 
இதனைத் தொடர்ந்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் பதட்டமான வாக்குச் சாவடிகள், அந்த வாக்குச் சாவடிகளில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எந்த மாதிரியான பிரச்னைகள் வந்துள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். 
திருப்பூர் வருவாய் அலுவலர் சுகுமார், நேர்முக உதவியாளர் கீதாபிரியா, கோபி கோட்டாட்சியர் அசோகன் மற்றும் சத்தியமங்கலம், பவானி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com