ஈரோடு முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா
By DIN | Published On : 22nd March 2019 08:01 AM | Last Updated : 22nd March 2019 08:01 AM | அ+அ அ- |

ஈரோடு முருகன் கோயில்களில் வியாழக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு முனிசிபல் காலனி சாலை, பாப்பாத்திக்காடு பாலமுருகன் கோயிலில் 19ஆவது ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை ஆகிய நிகழ்ச்சிகல் மார்ச் 20 ஆம் தேதி நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம், பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வியாழக்கிழமை அதிகாலை வந்தனர்.
பின்னர் பாலமுருகனுக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானை வழிபட்டனர்.
ஆறுமுகசுவாமி வள்ளி, தெய்வானை திருவீதி உலா வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
அதேபோல, திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, பாலாபிஷேகம் நடைபெற்றன.
வெள்ளிக்கவச அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...