உயர்மின் கோபுரம் திட்டத்துக்கு எதிரான போராட்டம் : கைது செய்யப்பட்ட விவசாயிகளில் 9 பேர் ஜாமீனில் விடுதலை
By DIN | Published On : 24th March 2019 03:28 AM | Last Updated : 24th March 2019 03:28 AM | அ+அ அ- |

உயர்மின் கோபுரம் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட விவசாயிகள் 12 பேரில் 9 பேருக்கு ஜாமீன் கிடைத்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே விளை நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி மார்ச் 15ஆம் தேதி நடந்தது. அப்போது, விளை நிலத்தில் குழிகள் தோண்ட எதிர்ப்பு தெரிவித்து, குழியில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வழக்குரைஞர் ஈசன், விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிரான கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.எம்.முனுசாமி, பொன்னையன், கவின் உள்பட 12 பேரை அரச்சலூர் போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்களை விடுவிக்கவும், வழக்கை திரும்பப் பெறவும் கோரி விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வழக்குரைஞர் ஈசன் உள்பட 9 பேருக்கு வழக்கில் இருந்து ஜாமீன் கிடைத்து சனிக்கிழமை வெளியே வந்தனர்.
மீதமுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.எம்.முனுசாமி, பொன்னையன், கவின் ஆகியோர் மீது வேறு சில வழக்குகள் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.