ஜவ்வரிசி, ஸ்டார்ச் இருப்பு வைக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை

மரவள்ளி கிழங்கை ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவாக மாற்றி கட்டுபடியாகும் விலை கிடைக்கும் வரை சேமித்து வைக்க விவசாயிகளுக்கு அரசு அனுமதி


மரவள்ளி கிழங்கை ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவாக மாற்றி கட்டுபடியாகும் விலை கிடைக்கும் வரை சேமித்து வைக்க விவசாயிகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
 ஆந்திரம் மற்றும் தமிழகத்தில் உள்ள ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  மரவள்ளி கிழங்கு அதிக அளவு பயிரிடப்படுகிறது. இதன் அறுவடைக் காலம் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை. மற்றக் காலங்களில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படும் பகுதியில் 20 சதவிகிதம் மட்டுமே பருவமழை பெய்தது.  
 இதனால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கீழ்பவானி பாசனம் மூலம் மட்டும் நடவாகியுள்ளது. மற்றப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் சாகுபடி செய்யப்படவில்லை. கடுமையான தண்ணீர் பற்றாக்குறையும் நிலவுகிறது.  கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரையில் மரவள்ளி ஒரு டன்னுக்கு குறைந்தபட்சமாக ரூ.4,500 முதல் ரூ.6,000 வரை விற்பனையானது. 
அதுவும் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் முத்தரப்புக் கூட்டம் மூலம் ரூ.6,000 விலை பரிந்துரைக்கப்பட்டதால் விற்பனையானது. 
  2 ஆண்டுகளுக்குப் பிறகு சேகோ ஆலைகளுக்கு ஒரு டன் கிழங்கு ரூ.9,500 முதல் ரூ.10,000 வரையும், உணவுக்காக கேரளத்துக்கு அனுப்பப்படும் கிழங்கு ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை விற்கப்படுகிறது. சேகோ ஆலை மூலம் விற்கப்படும் 90 கிலோ கொண்ட ஜவ்வரிசி கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.3,300 ஆக இருந்தது. தற்போது, ரூ.5,050  ஆக விலை உயர்ந்துள்ளது.
 இதுபோல் ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.2,200 இருந்து ரூ.2,750 ஆகவும், கிழங்குமாவு 70 கிலோ மூட்டை ரூ.1,400 இருந்து ரூ.1,900 ஆக விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் ஆலை உரிமையாளர்களும், வியாபாரிகளும்தான் பயன் பெறுகின்றனர். பெரும்பாலான விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை.
 அறுவடைக் காலங்களில் விலை குறைந்தும், அறுவடைக் காலத்துக்கு பிறகு விலை உயரும். இதில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து அதிகமாக ஆலை உள்ள பகுதியினான நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மரவள்ளிக்கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்.
 அதே சமயம் மரவள்ளிக்கிழங்கை 12 மாதங்களுக்கு மேல் நிலத்தில் வைத்திருக்க முடியாது. கிழங்கை சேகோ ஆலை மூலம் ஜவ்வரிசியாகவோ அல்லது ஸ்டார்ச் மாவாகவே மாற்றி, அதற்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கும் வரை சேமித்து வைக்க அரசு அனுமதிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டும் விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கும். 
 அதே சமயம் இறக்குமதி செய்யப்படும் மக்காசோளம் ஸ்டார்ச் மற்றும் சேகோ ஸ்டார்ச்சை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளிகிழங்கு மாவுச்சத்தின் அளவில் அதிகபட்சமாக 28 பாய்ண்ட் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல 30 பாய்ண்ட் என்ற அடிப்படையில் உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com