பெருந்துறை அருகே மகளை தாக்கி, தாயிடம் நகைப் பறிப்பு
By DIN | Published On : 24th March 2019 03:27 AM | Last Updated : 24th March 2019 03:27 AM | அ+அ அ- |

பெருந்துறை அருகே மகளை தாக்கி, தாயிடம் இருந்து 11 சவரன் நகைகளை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெருந்துறையை அடுத்த வாய்க்கால்மேடு, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகாஷ் (41). இவர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்புத் துறை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சபிதா (35). இவர்களது மகள் செல்லவர்ஷனி (12). இவர்களது குடியிருப்பு முன்பு மகள் செல்லவர்ஷினி மற்றும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு சபிதா வெள்ளிக்கிழமை பள்ளிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். குடியிருப்பின் இருபக்கமும் தோட்டம் உள்ளது. இதில் தோட்டத்து வழியாக வீட்டின் சுற்றுச் சுவர் ஏறி அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
அவர்கள் தங்களது முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்தனர். மேலும் கையில் கட்டை வைத்துக் கொண்டு நகைகளை தருமாறு கேட்டு சபிதாவை மிரட்டியுள்ளனர். ஆனால், நகையை தர சபிதா மறுக்கவே கட்டையால் குழந்தை செல்லவர்ஷனியை தாக்கியுள்ளனர்.
இதனால், பயந்துபோன சபிதா அவர் அணிந்திருந்த 11 சவரன் நகைகளை கழட்டிக் கொடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்தார். இதன்பேரில் பெருந்துறை காவல் உதவி ஆய்வாளர் ராம்பிரபு வழக்குப் பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் காயமடைந்த குழந்தை செல்லவர்ஷனியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.