தமிழக, கர்நாடக எல்லையில் சோதனை: ரூ. 1.70 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 09:30 AM | Last Updated : 28th March 2019 09:30 AM | அ+அ அ- |

தமிழக, கர்நாடக எல்லையான தாளவாடியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட இரு மாநில எல்லையான தாளவாடி பகுதியில் கர்நாடகம், தமிழகம் இடையே பணம் கடத்தலைத் தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வன் தலைமையில் எஸ்.ஜ. நஞ்சுண்டன் கொண்ட குழுவினர் எல்லைப் பகுதியான பாரதிபுரம், அருள்வாடி பகுதியிலும், அதே போல தொட்டகாஜனூர், சூசைபுரம், மெட்டல்வாடி, திகினாரை, மல்லன்குழி ஆகிய பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வரும் பேருந்து, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழக, கர்நாடக எல்லையான அருள்வாடி அருகே கர்நாடக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் காரில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
காரின் உரிமையாளர் சம்பத், கர்நாடக மாநிலம், ஹாசன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அருள்வாடி பகுதியில் இருந்து தாளவாடி பகுதிக்கு விதை உருளைக் கிழங்குக்கு பணம் பெற்று சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர்.