"பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்'

நான்கரை ஆண்டுகளாக உயர்த்தப்படாத பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என

நான்கரை ஆண்டுகளாக உயர்த்தப்படாத பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பசும் பால் ஒரு லிட்டருக்கு ரூ.28 ம், எருமைப் பால் ரூ.35 கொள்முதல் விலை வழங்கப்படும் என அறிவித்தார். இப்பாலில் கொழுப்பு 4.3 என்றும், எஸ்.என்.எப் 8.2 சதவீதமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஆனால், கொழுப்பு மற்றும் பிற கலப்பின் அடிப்படையில் பசும் பால் ரூ.22 முதல் ரூ.26 க்கும்,  எருமைப் பால் ரூ.30 முதல் ரூ.32 க்கும் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக பாலுக்கு விலை உயர்த்தப்படவில்லை.
கடந்த ஆண்டு முதல்வரை சந்தித்து பசும்பால் ரூ.35, எருமை பால் ரூ.45 க்கும் உயர்த்தி அறிவிக்க கேட்டோம். இதுவரை ஒரு ரூபாய் கூட உயரவில்லை. தற்போது, பசும்பால் ரூ.40, எருமைப் பால் ரூ.50 என உயர்த்தி கொள்முதல் செய்ய கேட்கிறோம்.
இதற்காக நாமக்கல்லில் மே 5 ஆம் தேதி மாநில அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளன. இக்கூட்டத்தில், பால் விலையை உயர்த்த வேண்டும். கால்நடை மருந்தகம், ஆவின் மூலம் வரும் கால்நடை மருத்துவர்களுக்கு போதிய மருந்து வழங்க வேண்டும். கால்நடை கலப்பு தீவனத்துக்கு மானியம் வழங்க வேண்டும்.
ஆவின் ஒன்றியம் சார்பில் ஒரு லிட்டர் பாலுக்கு லாபத்தில் இரண்டு ரூபாய் அந்தந்த சங்கத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அதை நிறுத்திவிட்டனர். 
மீண்டும், அத்தொகையை வழங்க வேண்டும். அரசு சார்பில் ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாய் ஊக்கத்தொகை பால் உற்பத்தியாளருக்கு வழங்க வேண்டும்.
 ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளரிடம் ரூ.25 க்கு ஒரு லிட்டர் பாலை கொள்முதல் செய்து ரூ.45 க்கு விற்பனை செய்கிறது. ஆவின் முகவர்களுக்கு கூடுதல் கமிஷன் வழங்காததால் தனியார் பாலை ஊக்குவிக்கின்றனர். 
பாலை பவுடராக்கி, ஒரு கிலோ ரூ.240 க்கு விற்கின்றனர். இதில் ஆவினுக்கு லாபம் கிடைக்காது. பாலை மதிப்புக்கூட்டி உயர்ந்த விலையில் விற்க முயல வேண்டும்.
பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்துவதுபோல, ஆண்டுக்கு ஒரு முறை பாலுக்கான விலையை உயர்த்த வேண்டும்.  நாமக்கல்லில் மே 5 ஆம் தேதி நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com