காவிரியில் பாசனத்துக்கு முறை வைத்து தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 05th May 2019 03:44 AM | Last Updated : 05th May 2019 03:44 AM | அ+அ அ- |

பருவமழை தொடங்கும் வரை மேட்டூர் அணையில் இருந்து சிறப்பு நனைப்பாக முறை வைத்து தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது:
மத்திய அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இதில் முதல் தவணையாக விண்ணப்பித்தவர்களுக்கு 35 சதவிகிதம் பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது தவணையாக 20 சதவிகிதம் விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள 65 சதவிகித விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கடந்த 2016-17, 2017-18 இல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை உரிய காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு நெல்லுக்கு காப்பீடு செய்த 60 சதவீத விவசாயிகளுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. மரவள்ளி, மக்காச்சோளம், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
ஆனால் வடமாநில விவசாயிகளுக்கு மட்டும் காப்பீட்டு நிறுவனம் முழுத் தொகையும் வழங்கி உள்ளது. தமிழக விவசாயிகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது.
கோடைகால சாகுபடிக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாய சான்று பெற கடந்த ஆண்டை போல வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் ஏற்படுத்த வேண்டும்.
அதே சமயம் 100 சதவிகிதம் மானியம் என்ற பெயரில் ஏக்கருக்கு ரூ.40,000 மட்டும் வழங்கப்படுகிறது. இந்த மானியமானது நுண்ணீர் டியூப்பின் விலை மீட்டருக்கு ரூ.3.50 இருக்கும் போது வழங்கப்பட்டதாகும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கபட்ட மானியத் தொகையே நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்சமயம் இந்த டியூப்பின் விலையானது 200 சதவிகிதம் உயர்ந்து மீட்டர் ரூ.10.50 ஆக உள்ளது.
இதனால் இத்திட்டத்தின் மீது விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே மானியத்தை உயர்த்தி ஏக்கருக்கு ஒரு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். அப்போது தான் இத்திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும். மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், பருவ மழை தொடங்கும் வரை சிறப்பு நனைப்பாக முறை வைத்து நீர் திறக்க வேண்டும். அதிக வரத்து வரும்போது தொடர்ச்சியாக நீர் திறக்க ஏதுவாக இருக்கும். இதனால் மழைநீர் வீணாகாமல் அதிக நீரை சேமிக்க முடியும்.
ஜூன் முதல் வாரத்தில் மேட்டூர் அணை பாசனத்துக்கு முதலில் முறை வைத்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.