ரயில்வே பாலங்களுக்கு மாற்றாக மேம்பாலங்கள் அமைக்கப்படுமா?
By DIN | Published On : 06th May 2019 03:15 AM | Last Updated : 06th May 2019 03:15 AM | அ+அ அ- |

கரூர், சென்னிமலை உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருந்து ஈரோடு நகரை இணைக்கும் சாலைகளில் உள்ள குறுகிய ரயில்வே பாலங்களுக்கு வழியாகச் செல்ல வேண்டியுள்ளதால் கனரக வாகன ஓட்டுநர்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும், சென்னிமலை பகுதியில் இருந்தும் ஈரோட்டுக்கு நாள்தோறும் பல ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன. கரூரில் இருந்து கொடுமுடி வழியாக ஈரோடு வரும் வாகனங்கள் கொடுமுடியில் இருந்து ஈரோடு செல்ல வெங்கம்பூர், காரணம்பாளையம் ரயில்வே கேட்கள், சாவடிபாளையம் மற்றும் நாடார்மேடு இடங்களில் உள்ள ரயில்வே பாலம் உள்ளிட்டவற்றைக் கடந்துதான் ஈரோடு நகருக்குள் நுழைய முடியும்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின் உயரம் மிகக்குறைவு. இதனால் நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் சாஸ்திரி நகர், சென்னிமலை சாலை வழியாக 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்த பாலத்தின் கீழ், ஒருபகுதி மட்டும் ஆழப்படுத்தப்பட்டு, அவ்வழியாக கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், பாலத்தின் மற்றொரு பகுதி மேடாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், இரவு நேரத்தில் வரும் கனரக வாகனங்கள் பாலத்தின் மேல் பகுதியில் இடித்து பாலம் சேதமடைவதோடு, வாகனங்களும் சேதமடைகின்றன. இதுபோல், கரூர் சாலையில் சாவடிபாளையம் முன்பும், அடுத்தும் 2 ரயில்வே பாலங்களிலும் இதே நிலையில்தான் உள்ளது. கரூரில் இருந்து கொடுமுடி வழியாக ஈரோட்டுக்கு வரும் கனரக வாகனங்கள், சாவடிபாளையத்தில் பாலம் உள்ளதால் அங்கிருந்து மொடக்குறிச்சி சென்று ஈரோடு வரவேண்டிய நிலை உள்ளது.
இதுபோல், ஈரோடு-சென்னிமலை சாலையில் ரங்கம்பாளையம் அருகே உள்ள பாலமும் குறுகிய நிலையில் உள்ளதால் ஒரு வாகனம் மட்டுமே நுழைய முடியும். மேலும், ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் கனரக வாகனங்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
கரூர் சாலையில் சாவடிபாளையம், நாடார்மேடு, சென்னிமலை சாலையில் ரங்கம்பாளையம் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், தொழில் வளர்ச்சியும் மேம்பட வாய்ப்புள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இந்த சாலைகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.