அங்கக வேளாண்மையால் மண் வளம் பாதுகாக்கப்படும்: வேளாண் இணை இயக்குநர்
By DIN | Published On : 16th May 2019 08:19 AM | Last Updated : 16th May 2019 08:19 AM | அ+அ அ- |

அங்கக (இயற்கை) வேளாண்மையில் செயற்கை ஊக்கிகள், உரம், பூச்சிக் கொல்லி ஆகியவை தவிர்க்கப்படுவதால் மண் வளம் பாதுகாக்கப்படும் என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வி.குணசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
உணவு மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிறுவன ஆலோசனைப்படி அங்கக வேளாண்மை என்பது இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியியல் செயல்பாடுகள், அங்ககக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகும். இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையிலான உழவியல், உயிரியல், இயந்திர முறைகளைப் பின்பற்றுதல் இதன் தனித்துவமாகும். அங்கக வேளாண்மையைப் புரிந்து செயல்படுத்தினால் சிறந்த லாபம் ஈட்டலாம்.
மண்ணின் அங்கக தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினை அதிகரித்தல் கவனமாக இயந்திர ஊடுருவதல், இவைகளின் மூலம் மண் வளத்தை நீண்ட நாள்கள் பாதுகாக்கலாம்.
மறைமுகமாக நாம் பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் அங்கக கழிவுகள் வழங்கும் ஊட்டச் சத்துக்களை நுண்ணுயிரிகளின் உதவியால் பயிர்கள் உட்கொள்கின்றன.
நிலத்துக்கு தகுந்த பயிர் வகை உபயோகித்தல், உயிரியல் தழைச்சத்து நிலை நிறுத்துதல், அங்கக பொருள்களின் சுழற்சி முறை மூலம் தழைச்சத்து தன்னிறைவு பெறுகிறது.
களை, பூச்சிகளில் இருந்து பாதுகாப்பு, நோய் பாதுகாப்பு இவை மூன்றையும் பயிர் சுழற்சி, இயற்கை எதிரிகள் பயன்பாடு, அளவான ரசாயன உபயோகம், எதிர்ப்பு சக்தி மிக்க பயிர்களை பயன்படுத்துதல், அங்கக எருவூட்டல் போன்றவற்றின் மூலம் அடைதல் இதன் சிறப்பாகும்.
அங்கக வேளாண்மை முறையில் கால்நடைகளுக்கு கிடைக்கும் தீவனங்கள் நஞ்சின்றி இருப்பது மட்டுமின்றி, கால்நடைகளின் கழிவுகள் வீணாகாமல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. அதிக இடுபொருள்கள் மூலம் வேளாண்மையின் பசுமை புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தன்னிறைவை அடைகிறோம் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர்.
எனவே தாக்கமான பின்விளைவுகளைக் கொண்ட ரசாயன வேளாண்மை முறையை தவிர்த்து, இயற்கை, ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான தேவை. அங்கக வேளாண்மை முறையில் அதிக மகசூல் பெறுவதுடன் மண்ணின் வளம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார்.