கோடை மழை எதிரொலி:  விற்பனைக்கு வரும் மாடுகள் வரத்து பாதியாக குறைவு

மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தீவனத் தட்டுப்பாடு குறைந்துள்ள நிலையில், சந்தைக்கு

மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தீவனத் தட்டுப்பாடு குறைந்துள்ள நிலையில், சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் வரத்து பாதியாக குறைந்துள்ளது.
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அருகாமையில் உள்ள நாமக்கல், சேலம் மாவட்டத்தில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதேபோல மாடுகளை வாங்குவதற்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். 
கோடைக் காலத்தில் நிலவும் வறட்சியால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைக்காத சூழல் ஏற்படும் என்பதால் சந்தையில் விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். 
இந்நிலையில் கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால் பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் கடந்த வாரத்தில் இருந்து விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 
வழக்கமாக 500 பசு மாடுகள் விற்பனைக்கு வரும் நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் 300 மட்டுமே கொண்டுவரப்பட்டன. இதே போல கன்றுக்குட்டிகள் 100, எருமை 150 மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாக வியாபாரிகள் கூறினர். உள்ளூர் வியாபாரிகள் அதிகம் வந்திருந்த போதிலும் ஆந்திரம், தெலங்கானா மாநில மொத்த வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்திருந்ததால் வியாபாரம் எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.                         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com