முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
அனுமதியின்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 பேர் மீட்பு: சமூகநலத் துறையினர் நடவடிக்கை
By DIN | Published On : 18th May 2019 06:33 AM | Last Updated : 18th May 2019 06:33 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோரை சமூகநலத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையத்தை அடுத்த பாரதி நகரில் வசித்து வருபவர் ஷேக் அமானுல்லா (66). இவரது மகள் ஆயிஷா (38). இவர்கள் இருவரும் சின்னியம்பாளையத்தை அடுத்த கரூர் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அன்பு இல்லம் என்ற பெயரில் முதியோர் இல்லம் நடத்தி வந்தனர்.
இதில் ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கியிருந்தனர். இந்த முதியோர் இல்லம் நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்துள்ளது.
மேலும், முதியோர்களை துன்புறுத்துவதாக சமூகநலத் துறை மற்றும் மொடக்குறிச்சி போலீஸாருக்கு வந்த புகாரையடுத்து கடந்த ஆண்டு சமூகநலத் துறை அதிகாரிகள் முதியோர்களை மீட்டு வேறு இடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, முதியோர் இல்லத்தை இடித்து அகற்றினர்.
இதையடுத்து, பாரதி நகரில் சொந்தமாக நிலம் வாங்கி கட்டிய வீட்டை அரசு அனுமதி இல்லாமல் முதியோர் இல்லமாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்வேறு தரப்பினர் சமூக நலத் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் திடீர் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கிருந்த 15 க்கும் மேற்பட்ட முதியோர்களை மீட்டு வேறு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் முதியோர் இல்லம் நடத்துவதாக சமூக நலத் துறைக்கு வந்த தகவலையடுத்து சென்னை சமூக நலத் துறை இணை இயக்குநர் ரேவதி, ஈரோடு மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் பூங்கோதை, மொடக்குறிச்சி வட்டாட்சியர் அசரபுனிஷா மற்றும் மொடக்குறிச்சி போலீஸார் ஆகியோர் முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினர்.
அப்போது, அனுமதி பெறாமல் முதியோர் இல்லம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 ஆண்கள், 7 பெண்கள் உள்பட 10 பேரை சமூகநலத் துறையினர் மீட்டு ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அனுமதியின்றி முதியோர் நடத்திய ஷேக்அமானுல்லா மற்றும் அவரது மகள் ஆயிஷா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.