முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
By DIN | Published On : 18th May 2019 06:38 AM | Last Updated : 18th May 2019 06:38 AM | அ+அ அ- |

சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டையம்பாளையத்தில் சில நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேமாண்டபாளையம் ஊராட்சி கொண்டையம்பாளையம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் நம்பியூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த 8 நாள்களாக குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.
மேலும், கோடை வெயில் பாதிப்பு காரணமாக கால்நடைகளும் குடிநீரின்றி தவித்து வந்தன.
இது குறித்து கொண்டையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த கிராமமக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நம்பியூர் புன்செய் புளியம்பட்டி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கைக எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.