முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 18th May 2019 06:34 AM | Last Updated : 18th May 2019 06:34 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் மரம் முறிந்து விழுந்து சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான செண்பகபுதூர், சின்னவாய்ப்புதூர் மற்றும் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி, புங்கம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
அப்போது, செண்பகபுதூர் வாய்க்கால் பாலம் அருகே சாலையோரம் இருந்த பழமையான வேப்பமரம் ஒன்று காற்றின் வேகத்தால் வேருடன் சாலையின் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சத்தியமங்கலம் துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றினர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து போக்குவரத்து சீரானது.