ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகளால் அடிக்கடி குழாய்கள் உடைப்பு: குடிநீர் விநியோகத்தில் சிக்கல்

ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படும்போது காவிரி குடிநீர்

ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படும்போது காவிரி குடிநீர் குழாய்கள் உடைந்துவிடுவதால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இதற்காக பவானியை அடுத்துள்ள ஊராட்சிக்கோட்டையில் இருந்து ஈரோடு வரை சாலையோரங்களில் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
குழாய்கள் பதிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மாநகராட்சி 1ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட ஆர்.என்.புதூர், ஜவுளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை திட்டப் பணிகளுக்காக குழிகள் தோண்டும்போது தற்போது பயன்பாட்டில் உள்ள காவிரி குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுகின்றன. இதனால் 1ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து காந்திய மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பெரியசாமி கூறியதாவது:
ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்தில் குழாய்கள் பதிக்க ஆங்காங்கே வெடிகள் வைத்து குழிகள் தோண்டப்படுகின்றன. 
இதனால், தற்போது பயன்பாட்டில் உள்ள காவிரி குடிநீர்த் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. உடைப்பு ஏற்பட்ட இடத்தை சரி செய்வதற்குள் மற்றொரு இடத்தில் உடைப்பு ஏற்படுகிறது. 
இதனால் ஆர்.என்.புதூர், பாலக்காட்டூர், சி.எம்.நகர், கொத்துக்காரன்புதூர், மாதேஸ்வரா நகர், ஜவுளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சரிவர தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. 
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, திட்டப் பணிகள் முடிவடையும் வரை லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், குடிநீர் திட்டப் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டுள்ளதால் ஆர்.என்.புதூர், சித்தோடு சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் லாரி செல்ல முடியாமல் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 
எனவே, சாலையை செப்பணிட்டு லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்க வேண்டும். இல்லையெனில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிப்பதோடு உடைப்புகள் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com