விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும்
By DIN | Published On : 18th May 2019 06:36 AM | Last Updated : 18th May 2019 06:36 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ள வேண்டும் என்று வேளாண்மைத் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் வி.குணசேகரன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்தாலும் அவ்வப்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் உழவு மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சாகுபடி நிலங்களில் பயிர் அறுவடைக்கு பின் பெய்யும் கோடை மழையை அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கு கோடையில் உழவு செய்வது தான் சிறந்தது. கோடை உழவு செய்யும்போது அதில் இருந்து வெளிவரும் முட்டைகள், புழு, கூட்டுப்புழு ஆகியவற்றை பறவைகள் உணவாக உண்பதால் பயிர் செய்யும்போது பூச்சிகளின் தாக்குதல் குறையும்.
மானாவாரி நிலங்களில் மண்ணின் தன்மை மிகவும் கடினமாக இருக்கும். கோடையில் உழவு செய்யும்போது மண்ணின் இறுக்கம் குறைந்து தன்மை மாறுபடும். மண் துகள்களாக மாறுவதால் நிலத்தில் காற்றோட்டம் அதிகரித்து, நுண்ணுயிர்களின் வளர்ச்சி மேம்படும்.
கோடை உழவு செய்வதால், களைச் செடிகள் மற்றும் பயிர் கழிவுகள் அழிக்கப்பட்டு, மக்கி உரமாக மாறுகிறது. எனவே, விவசாயிகள் அவசியம் கோடை உழவு செய்ய வேண்டும் என்றார்.