வேலாமரத்தூர் மயானத்தை சீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 18th May 2019 06:33 AM | Last Updated : 18th May 2019 06:33 AM | அ+அ அ- |

பவானியை அடுத்த வேலாமரத்தூர் கிராமத்தில் உள்ள மயானத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் பவானி வட்டத் தலைவர்டி.ரவீந்திரன், செயலர் எஸ்.மாணிக்கம் தலைமையில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
பவானி வட்டம், புன்னம் சிற்றுராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வேலாமத்தூர் காலனி உள்ளது. இப்பகுதி மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் மயான நிலத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் குளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மயான நிலத்தை ஆக்கிரமித்து குளம் அமைத்தால் இந்த கிராமத்தில் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, மயான நிலத்தை சீரமைத்து எரிமேடை அமைப்பதோடு, சுற்றுச்சுவர் கட்டி தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளனர்.