பவானி ஆற்றில் மணல், தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

பவானி ஆற்றில் மணல் மற்றும் தண்ணீர்த் திருட்டு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவானி ஆற்றில் மணல் மற்றும் தண்ணீர்த் திருட்டு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பவானி ஆற்றின் வழியாக பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது. 
ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலான நாள்களில் ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் பவானி ஆற்றில் அதிகமாக மணல் உற்பத்தியாகிறது.
இந்த ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் பரிசலிலும், ஆற்றின் ஓரத்திலும் மணலை அள்ளி வயலுக்குள் போட்டும், கரையில் குவித்தும் கடத்தி வருகின்றனர். ஆற்றில் பல கிலோ மீட்டர் தூரத்தில் மணல் திருட்டு நடக்கிறது.
சத்தியமங்கலம், கோபி, அந்தியூர், பவானி ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள் வழியாக பவானி ஆறு செல்கின்றன. எலவமலை, காளிங்கராயன்பாளையம், ஜம்பை, அத்தாணி, பவானி, ஆப்பக்கூடல், பங்களாபுதூர், கள்ளிப்பட்டி போன்ற பகுதிகளில் எவ்வித தடையும் இல்லாமல் மணல் அள்ளப்படுகிறது.
ஆனால், பொதுப் பணித் துறை, வருவாய் துறையினர் இந்த சட்டவிரோத செயலைக் கண்டு கொள்வதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன சபைத் தலைவர் வழக்குரைஞர் சுபி.தளபதி கூறியதாவது:
பவானி ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. ஆற்றில் மணல் திருட்டால் நீரோட்டம் பாதிக்கிறது. விவசாயம், குடிநீர்த் தேவைக்கான தண்ணீர் விநியோகம் பாதிப்படைகிறது.
எனவே அனைத்துத் துறையினர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்து மணல் மற்றும் தண்ணீர்த் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com