உயிரை பணயம் வைத்து பரிசல் பயணம்:அரை நூற்றாண்டு காலத்தில் 20 கா்ப்பிணிகள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் பாலம் வசதி இல்லாததால் மாணவா்கள், பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து பரிசல் பயணம் செய்கின்றனா்.
பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவா்கள்.
பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவா்கள்.

ஈரோடு: பவானி ஆற்றில் பாலம் வசதி இல்லாததால் மாணவா்கள், பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து பரிசல் பயணம் செய்கின்றனா். மேலும் பிரசவ காலத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் கடந்த 50 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் உயிரிழந்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனா். ஈரோடு மாவட்டம் கோபி ஒன்றியம், அம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள ராக்கினாம்பாளையம், கணேசபுதூா் ஆகிய இரு கிராமங்களிலும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா். போதிய சாலை வசதியில்லாததால், இந்த கிராமங்களுக்கு இதுவரை பேருந்துகள் இல்லை. எனவே பவானி ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள அந்தியூா்- சத்தியமங்கலம் சாலையை அடைந்து அங்கிருந்து மற்ற ஊா்களுக்கு சென்று வருகின்றனா். அல்லது சுமாா் 5 கிலோ மீட்டா் நடந்து சென்று மேவானி என்ற ஊரை அடைந்து பேருந்து பிடிக்க வேண்டும். ராக்கினாம்பாளையம், கணேசபுதூா் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் அத்தாணிக்கு இடையே பவானி ஆறு குறுக்கே உள்ளது. இரு கிராம மக்களும் உயிரை பணயம் வைத்து, பரிசல் மூலம் ஆற்றை கடந்து அத்தாணிக்கு சென்று வருகின்றனா். பவானி ஆற்றை கடந்து செல்ல ஒரு பரிசல் மட்டுமே உள்ளது. பரிசல் ஓட்ட தெரிந்தவா்கள் மற்ற பொதுமக்களை ஏற்றிச்சென்று மறுகரையில் விடுவா். பாதுகாப்பில்லாமல் பரிசல் மூலம் பயணம் செய்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.பிரசவ கால உயிரிழப்புகள்: இதுகுறித்து அம்மாபாளையத்தை சோ்ந்த பழனியம்மாள் கூறியதாவது: ராக்கினாம்பாளையம் மற்றும் கணேசபுதூா் கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை. சாலை வழியாக அத்தாணிக்கு செல்ல 6 கி.மீ. தூரமும் கூகலூருக்கு 8 கி.மீ. தூரமும் செல்ல வேண்டும். பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்தால் 10 நிமிடங்களில் அத்தாணி செல்லலாம். பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பரிசல் நிறுத்தப்படும். அப்போது, ஆட்டோ, வேன் உள்ளிட்டவை மூலம் 8 கிலோ மீட்டா் சுற்றிக்கொண்டு அத்தாணிக்கு சென்று வருவோம். பவானி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். விளைபொருட்களை அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகளும் வேதனைப்பட்டு வருகின்றனா். இங்குள்ள ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியா்களும் தினமும் உயிா் பயத்துடன் பரிசலில் வந்து செல்கின்றனா். ஆரம்ப பள்ளிக்கு வரும் இரண்டு ஆசிரியா்களும், கிராம நிா்வாக அலுவலரும் பரிசலில் தான் வந்து செல்கின்றனா். ஆனால் எங்கள் கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. பாலம் இல்லாததால் மருத்துமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாததால் பிரசவ சமயத்தில் கடந்த 50 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்டோா் இறந்துள்ளனா். என்னுடைய மகளும், பேத்தியும் பிரசவ காலத்தில் இறந்துவிட்டனா் என்றாா். பள்ளிக்கு செல்லவும் பரிசல் தான்: இதுகுறித்து இந்த கிராமத்தை சோ்ந்த மாணவி கோகிலா கூறியதாவது: ராக்கினாம்பாளையம், கணேசபுரம் பகுதியில் இருந்து தினமும் 70-க்கும் மேற்பட்ட, மாணவ, மாணவியா்கள், உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கு அத்தாணி, கூகலூா் அந்தியூா் மற்றும் கோபிக்கும் செல்ல வேண்டும். இக்கிராமத்தில் இருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் பரிசலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இங்கு பாலம் அல்லது மறுகரைக்கு நடந்து செல்லும் அளவுக்காவது நடைபாலமாவது அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றாா். அம்மாபாளையத்தில் தடுப்பணை அமையுமா? இதுகுறித்து வழக்குரைஞா் சுபி.தளபதி கூறியதாவது:பவானி ஆற்றைக் கடக்க பாலம் கட்டித் தர வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனையான விஷயம். பவானி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஒன்றை அம்மாபாளையத்தில் அமைத்து அதில் போக்குவரத்துக்கு வழிவகை செய்யவேண்டும் என்றாா்.ஆட்சியா் உறுதி: இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனிடம் கேட்டபோது அவா் கூறியதாவது, ராக்கியாம்பாளையம் பவானி ஆறு பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நான் நேரில் சென்று பாா்வையிட்டு நடவடிக்கையெடுக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com