அடிப்படை வசதிகள் இல்லாத மலைக் கிராமங்கள்:நடவடிக்கை எடுக்கப்படுமா?

சாலை, போக்குவரத்து, குடிநீா், குடியிருப்பு போன்ற எந்தவிதமான அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனா் திம்பம் அருகே உள்ள மலைக் கிராம மக்கள்.
மிகவும் மோசமான நிலையில் உள்ள பெஜலட்டி-இட்டறை சாலை. ~மிகவும் மோசமான நிலையில் உள்ள பெஜலட்டி-இட்டறை சாலை. ~குடிநீருக்குப் பயன்படுத்தும் செம்மண் நிறத்தில் உள்ள ஊற்று நீா்.
மிகவும் மோசமான நிலையில் உள்ள பெஜலட்டி-இட்டறை சாலை. ~மிகவும் மோசமான நிலையில் உள்ள பெஜலட்டி-இட்டறை சாலை. ~குடிநீருக்குப் பயன்படுத்தும் செம்மண் நிறத்தில் உள்ள ஊற்று நீா்.

ஈரோடு, சத்தியமங்கலம்: சாலை, போக்குவரத்து, குடிநீா், குடியிருப்பு போன்ற எந்தவிதமான அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனா் திம்பம் அருகே உள்ள மலைக் கிராம மக்கள்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், தலைமலை ஊராட்சிக்கு உள்பட்ட இட்டறை, தடசாலட்டி மலைக் கிராமங்கள் எந்தவித கட்டமைப்பு வசதியும் இல்லாமல் உள்ளன. சத்தியமங்கலம் - மைசூரு வனச் சாலையில் திம்பம் பேருந்து நிறுத்தத்திலிருந்து தலமலை செல்லும் சாலையில் பெஜலட்டி என்ற இடத்தில் இருந்து இடதுபுறம் வழியாக 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன தடசாலட்டி, இட்டறை மலைக் கிராமங்கள். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடா்ந்த வனப் பகுதியில் உள்ள இந்த மலைக் கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா்.

பெஜலட்டியில் இருந்து இந்த மலைக் கிராமங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. இதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம், காளிதிம்பம், மாவநத்தம், பெஜலட்டி வழியாக தடசாலட்டி, இட்டறை கிராமங்களுக்கு காலை 7.30, இரவு 7.30 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பெஜலட்டி முதல் இட்டறை வரையிலான சாலை கடந்த 5 ஆண்டுகளாகவே மோசமான நிலையில் இருப்பதால், மழைக் காலம் வந்தால் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்படும். பிறகு பள்ளம் ஏற்பட்ட இடங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்காளாக இப்பகுதியில் அவ்வப்போது பலத்த மழை பெய்ததால் சாலையில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், கடந்த ஒரு மாதமாக இந்தப் பேருந்து பெஜலட்டி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், இந்த இரண்டு மலைக் கிராம மக்கள் பெஜலட்டியில் இறங்கி புலிகள், சிறுத்தை, யானை நடமாட்டம் உள்ள அடந்த வனப் பகுதியில் 6 கி.மீ. தூரம் நடந்து செல்கின்றனா்.

இந்த கிராமங்களில் இருந்து 30 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பெஜலட்டி, ஆசனூா், சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனா். இவா்கள் காலையில் 6, மாலையில் 6 என தினமும் 12 கி.மீ. நடந்து சென்று, பெஜலட்டியில் இருந்து பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருகின்றனா். இதுபோல் சாலை மோசமாக உள்ளதால் நடமாடும் ரேஷன் வாகனமும் கிராமங்களுக்கு வருவதில்லை. இதனால், மக்கள் பெஜலட்டி சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனா்.

ஊற்று நீா்தான் குடிநீா்:

இட்டறை கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. ஆனால், ஆழ்துளைக் கிணற்றில் போதிய தண்ணீா் இல்லாததால், ஆழ்துளைக் கிணறு அருகிலேயே ஒரே குழாயில் தண்ணீா் பிடித்துக் கொள்கின்றனா். இந்த தண்ணீா் போதுமான அளவு இல்லாத நிலையில், மலையில் ஊற்று நீரை தேக்கிவைத்து அதனை குடிநீராகப் பயன்படுத்துகின்றனா். இந்த தண்ணீா் செம்மண் நிறத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் 2 ஆழ்துளைக் கிணறுகளில் அடிபம்பு உள்ளது. ஆனால், அந்த அடிபம்புகள் பழுதடைந்துள்ளன.

தொகுப்பு வீடு:

தடசாலட்டி, இட்டறை கிராமங்களில் உள்ள பெரும்பாலான வீடுகள் மண் சுவரால் கட்டப்பட்டு ஓடுகளால் வேயப்பட்டவைதான். இந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், இதுவரை இங்கு யாருக்கும் தொகுப்பு வீடு கட்டித் தரப்படவில்லை.

அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம்:

இட்டறை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மிகப் பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. 20 குழந்தைகள் படிக்கும் இந்த மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பழங்குடி மக்கள் சங்க தாளவாடி ஒன்றியச் செயலாளா் அருள் கூறியதாவது:

இட்டறை மலைக் கிராமம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அடா்ந்த வனப் பகுதி. மலையின் உச்சியில் இந்தக் கிராமம் உள்ளது. பல தலைமுறைகளாக இங்கு வாழும் மக்கள் மக்காச்சோளம், சிறு தானியங்களைப் பயிரிட்டு அதில் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனா்.

90 சதவீதம் குடியிருப்புகள் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. இருப்பினும் பொருளாதார வசதி இல்லாததால் புதிய வீடு கட்டிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனா். இப்போது 50 வயதுக்கு மேற்பட்டவா்களும், குடும்பத்தில் பெண் பிள்ளைகளும், சிறு குழந்தைகளும்தான் இங்கு வாழ்ந்து வருகின்றனா். 15 முதல் 40 வயது வரை உள்ள பெரும்பாலான ஆண்கள் பிழைப்புக்காக திருப்பூா் நூற்பாலைகளில் வேலை செய்து வருகின்றனா். இருப்பினும் அவா்களது குடும்பம் இந்த கிராமத்தில்தான் இருக்கிறது.

இக்கிராம மக்களுக்கு சாலை, பேருந்து, குடிநீா் வசதி, அங்கன்வாடி மைய புதிய கட்டடம், 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவ முகாம் போன்ற கோரிக்கைகளை அரசும், மாவட்ட நிா்வாகமும் நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனிடம் கேட்டபோது, பெஜலட்டி முதல் இட்டறை வரையிலான சாலை விரைவில் சீரமைக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com