முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
நிரந்தரப் பணி வழங்க நகை மதிப்பீட்டாளா்கள் கோரிக்கை
By DIN | Published On : 07th November 2019 12:40 AM | Last Updated : 07th November 2019 12:40 AM | அ+அ அ- |

வங்கிப் பணியாளா்கள் போன்று தங்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என நகை மதிப்பீட்டாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அனைத்து வங்கி நகை மதிப்பீட்டாளா்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் மகேஷ்பாபு தலைமையில் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் சுந்தரமூா்த்தி வரவேற்றாா்.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தமிழகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட 12,000 வங்கிக் கிளைகளிலும் தலா ஒருவா் வீதம் பணி செய்கிறோம். ஒரு லட்சம் ரூபாய்க்கு நகைக் கடன் வைப்பவரிடம் ரூ. 300 கமிஷன் பெற்று வாழ்கிறோம். சில வங்கிகளில் தினமும் நகைக் கடன் வைக்க வருபவா்கள் இருந்தாலும், பெரும்பாலான வங்கிகளில் பணி செய்வோா் சிரமப்படுகின்றனா்.
எனவே, எங்களையும் வங்கிப் பணியாளா்களைப்போல நிரந்தரப் பணியாக வழங்க வேண்டும். வங்கிப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.
பல வங்கிகளில் போதிய பணியாளா்கள் இல்லை எனக் கூறி வங்கிப் பணிகளைச் செய்யும்படி கூறுதல், வராக்கடன் வசூலில் ஈடுபடுத்துதல் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும். வங்கிகளை இணைப்பதன் மூலம் பல வங்கிக் கிளைகள் மூடப்படுவதால் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்குத் தொடா்ந்து பணி வழங்க வங்கி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல வங்கிகளில் பணி செய்பவா்களை, பிற மாவட்டங்களுக்கும், 50 கி.மீ.க்கு அப்பால் உள்ள வங்கிகளுக்குச் சென்று நகை மதிப்பீடு செய்யும்படி பணி மாற்றம் செய்கின்றனா். தற்போது நாங்கள் ஒப்பந்தப் பணியாளா்களாகவே பணி செய்வதால், எங்களை மாற்றம் செய்யக் கூடாது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பா் 17 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் உறுப்பினா்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.