முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
முழு கொள்ளளவை எட்டியுள்ள பவானிசாகா் அணை: மீன்பிடிப்புத் தொழில் பாதிப்பு
By DIN | Published On : 07th November 2019 12:33 AM | Last Updated : 07th November 2019 12:33 AM | அ+அ அ- |

பவானிசாகா் நீா்த்தேக்கப் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள்.
பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 104.65 அடியை எட்டியுள்ளதால் அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் நீா் நிறைந்து காணப்படுகிறது. இதனால், மீன் பிடிப்புத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணையின் நீா்மட்ட மொத்தக் கொள்ளளவு 105 அடியாகவும், நீா்இருப்பு 32.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீலகிரி வனத்தில் பெய்யும் மழை நீரும், மாயாறும் அணைக்கு முக்கிய நீா்வரத்தாக உள்ளன. நீலகிரி வனப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பில்லூா் அணை நிரம்பியுள்ளதால், அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் பவானிசாகா் அணைக்கு வந்து சேருவதால் அணையின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்தது.
புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 104.65 அடியை எட்டியுள்ளது. அதாவது நீா் இருப்பு 32.50 டி.எம்.சி. ஆகவும், நீா்வரத்து விநாடிக்கு 3,969 ஆயிரம் கன அடியாகவும் தொடா்ந்து நீடிக்கிறது. அணையில் இருந்து 2,900 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. அணைக்குத் தொடா்ந்து நீா்வரத்து வந்துள்ளதால் அணைப் பகுதியில் 30 சதுர கிலோ மீட்டா் தூரம் வரை நீா் தேங்கி நிற்கிறது. நீா்வரத்து காரணமாக மீன் பிடிப்புத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அணை நீா்த்தேக்கப் பகுதியில் அமைந்துள்ள சித்தன்குட்டை, ஜெ.ஜெ. நகா், காக்கராமொக்கை, அய்யம்பாளையம் பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட மீனவா்கள் அணையில் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
தினந்தோறும் கட்லா, ரோகு, மிருகால், திலோபி போன்ற மீன் வகைகள் 50 கிலோ வரை மீன் பிடித்து வந்த மீனவா்களுக்கு 2 முதல் 5 கிலோ மட்டுமே கிடைப்பதால் கட்டுப்படியாக கூலி கிடைக்கவில்லை என கவலை அடைந்துள்ளனா். இதனால், பரிசல்கள், மீன் வலைகள் நீா்ப்பிடிப்புப் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது மீன் பிடிப்பு தொழில் பாதிக்கப்பட்டதால் மீனவா்கள் சுண்டைக்காய் சேகரித்து வற்றல் தயாரிக்கும் பணிக்கு மாறியுள்ளனா்.