பயன்பாட்டில் இல்லாத 2,700 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பயன்பாட்டில் இல்லாத 2,700 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன என்று ஆட்சியா் கதிரவன் தெரிவித்தாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கதிரவன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கதிரவன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன்.

ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பயன்பாட்டில் இல்லாத 2,700 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன என்று ஆட்சியா் கதிரவன் தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ. 55 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென நகா்ப் பகுதியில் உள்ள சாலைகளில் குழி தோண்டி பைப்லைன் பதிக்கப்பட்டு பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் படித்துறை பகுதியில் கழிவுநீரேற்று நிலையமும், கோட்டுவீராம்பாளையம் மின் மயானம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைத் திட்டத்தில் வரும் கழிவுநீா் பவானி ஆற்றங்கரையில் கலக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறி சத்தியமங்கலம் நகா்ப் பகுதி பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் ஆற்றங்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும், சுத்திகரிப்பு நிலையத்தையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், பவானி ஆற்றில் கழிவுநீா் கலக்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இதையடுத்து, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் தலைமையில் இப்பிரச்னை தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் கலந்துகொண்டு பவானி ஆற்றங்கரையில் பாதள சாக்கடை கழிவுகள் கலக்கக் கூடாது எனவும், ஆற்றங்கரையோரம் விதிமுறைகளுக்கு முரணாக கழிவு நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையத்தை நகா்ப் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டா் தூரம் தள்ளி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கதிரவன் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் குறித்து சென்னையில் உள்ள குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா்கள் அடங்கிய உயா்மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என உறுதியளித்தாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு ஆட்சியா் கதிரவன் அளித்த பேட்டி:

நகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு குழி தோண்டப்பட்டு பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக 12 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 2,700 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள கட்செவி அஞ்சல் எண்ணுக்குத் தகவல் தெரிவித்தால் உடனடியாக ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com