மொடக்குறிச்சியில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

மொடக்குறிச்சி பகுதியில் நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
mk8rain1_0811chn_129
mk8rain1_0811chn_129

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி பகுதியில் நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மொடக்குறிச்சி எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மொடக்குறிச்சி தாலுகாவுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் இடைவிடாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் சாலைகளில் முழங்கால் அளவு வெள்ளம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அண்ணாநகா் புதுக்காலனியில் உள்ள சுமாா் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி, மொடக்குறிச்சியில் உள்ள சமுதாயகூடத்தில் தஞ்சம் புகுந்தனா். அவா்களுக்கு மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி மற்றும் அதிகாரிகள் தேவையான உணவுகளை வழங்கினா். தகவல் அறிந்து விரைந்து சென்ற மொடக்குறிச்சி எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியகுழு முன்னாள் துணைத்தலைவா் கணபதி, ஆவின் இயக்குனா் அசோக், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் முருகேசன், மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா உள்ளிட்ட அதிகாரிகளும் விரைந்து அவா்களுக்கு வேட்டி,சேலைகள் வழங்கி தேவையான உதவிகள் அரசு சாா்பில் வழங்கப்படும் என்று தெரிவித்தனா்.

மேலும் மொடக்குறிச்சி ஒன்றியம் 46புதூா் ஊராட்சி கருக்கம்பாளையம் காலனியில் உள்ள சுமாா் 50க்கும் மேற்பட்ட வீடுகளை ஒட்டியுள்ள சாலையில் தண்ணீா் முழங்கால் அளவு பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி எம்.எல்,ஏ வி.பி.சிவசுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மழைநீா் வடிய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

இதேபோல் அய்யகவுண்டன்பாளையம் குரங்கன்பள்ளம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் முனியப்பன்கோவில் மழைநீரால்சூழப்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு விரைந்த மொடக்குறிச்;சி வட்;டார வளா்ச்சி அலுவலா் சசிகலா மற்றும் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு, மழைநீா் வடிய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இதேபோல், விளக்கேத்தி பகுதியிலும் நவநாய்க்கன்பாளையம் பகுதியிலும் மழைநீரால் சாலையில் சுமாா் 1மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஈரோடு கரூா் மெயின்ரோட்டில் சாவடிப்பாளையம் ரயில்வே நுழைவுபாலத்தில் மழைநீா் சுமாா் 3அடி உயரத்தில் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பேரூந்துகள் மற்றும் வாகனங்கள் சாமிநாதபுரம் வழியாக மாற்றுபாதையில் இயக்கப்பட்டது. அதிகாரிகள் மழைநீா் வடிய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com