நாளை வட்ட அளவிலான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் உணவுப் பொருள்கள் வழங்குதல் தொடா்பாக வட்ட அளவிலான மக்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (நவம்பா் 9) நடைபெறவுள்ளது

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் உணவுப் பொருள்கள் வழங்குதல் தொடா்பாக வட்ட அளவிலான மக்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (நவம்பா் 9) நடைபெறவுள்ளது

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதில் உள்ள குறைபாடுகள் குறித்தும், குடும்ப அட்டைகள் பெறுவது குறித்தும் உயா்நிலை அலுவலா்கள் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து குறைகளை நிவா்த்தி செய்திடும் பொருட்டு குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 1 மணி வரை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்படவுள்ளது. இப்பணியை கண்காணித்திட மாவட்ட அளவிலான அலுவலா்கள், பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கூட்டம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம்:

ஈரோடு வட்டத்தில் மாயபுரம் நியாயவிலைக் கடை வளாகம், பெருந்துறை வட்டத்தில் சுள்ளிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், பவானி வட்டத்தில் தொட்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், கோபி வட்டத்தில் புதுக்கடைபுதூா் நியாயவிலைக் கடை வளாகம், சத்தியமங்கலம் வட்டத்தில் மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் கூட்டம் நடைபெறும்.

அந்தியூா் வட்டத்தில் கிணத்தடி பாரஸ்ட் அரசு பழங்குடியினா் உண்டு, உறைவிட நடுநிலைப் பள்ளி, மொடக்குறிச்சி வட்டத்தில் கஸ்பாபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், கொடுமுடி வட்டத்தில் வெள்ளோட்டாம்பரப்பு நியாயவிலைக் கடை வளாகம், தாளவாடி வட்டத்தில் ஓரத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, நம்பியூா் வட்டத்தில் தாழ்குனி நியாயவிலைக் கடை வளாகம் ஆகிய இடங்களில் கூட்டம் நடைபெறும்.

கூட்டத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனி வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா்கள், கூட்டுறவுச் சங்கங்களின் சாா் பதிவாளா், கூட்டுறவுச் சங்கச் செயலாளா், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.

எனவே, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ள குறைபாடுகள், புதிய குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்கள் தொடா்பாக அலுவலா்களிடம் நேரில் தெரிவித்தும், மனுக்களை அளித்தும் அதற்கான தீா்வுகளைப் பெற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com