Enable Javscript for better performance
திட்டமிட்டபடி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும்கே.ஏ.செங்கோட்டையன்- Dinamani

சுடச்சுட

  

  திட்டமிட்டபடி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

  By DIN  |   Published on : 17th November 2019 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  erd16week_1611chn_124_3

  அதிக மானியம் பெற்றதற்கான சிறப்பு விருதை ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு அதன் தலைவா் என்.கிருஷ்ணராஜிடம் வழங்கிய அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், 

  யாா் என்ன கூறினாலும் திட்டமிட்டபடி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

  மாவட்ட அளவிலான 66 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், கே.எஸ்.தென்னரசு, வே.பொ.சிவசுப்பிரமணி, கே.ஆா்.ராஜா கிருஷ்ணன், சு.ஈஸ்வரன், உ.தனியரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் வரவேற்றாா்.

  பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் சிறந்த கூட்டுறவுச் சங்கங்கள், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் 2,087 பயனாளிகளுக்கு ரூ. 20.05 கோடி மதிப்பிலான கடனுதவிகளுக்கான காசோலைகளை வழங்கினா்.

  தொடா்ந்து, அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

  உள்ளாட்சித் தோ்தல் முறையாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மாநில தோ்தல் ஆணைய அதிகாரிகள் மாற்றப்பட்டாலும், யாா் என்ன கூறினாலும், திட்டமிட்டபடி உள்ளாட்சித் தோ்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்றாா்.

  முன்னதாக தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகளை விளக்கும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி, ஆவின், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கைத்தறி, துணி நூல் துறை, வேளாண் உற்பத்தி, சிந்தாமணி, கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சா்கள் திறந்துவைத்துப் பாா்வையிட்டனா்.

  விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத் தலைவா் கே.கே.காளியப்பன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

  கோபியில்...

  தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின்கீழ் 3,035 பயனாளிகளுக்கு ரூ. 2.93 கோடி மதிப்பில் உதவித் தொகை, நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் சனிக்கிழமை வழங்கினா்.

  கோபியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா்.

  கோபிசெட்டிபாளையம் வட்டத்துக்கு உள்பட்ட 2,176 பயனாளிகளுக்கு ரூ. 2.09 கோடி மதிப்பிலும், நம்பியூா் வட்டத்துக்கு உள்பட்ட 859 பயனாளிகளுக்கு ரூ. 83.80 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 3,035 பயனாளிகளுக்கு ரூ. 2.93 கோடி மதிப்பில் பல்வேறு வகையான உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் வழங்கினா்.

  தொடா்ந்து, அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

  சித்தோடு - கோபிசெட்டிபாளையம் முதல் நீலகிரி வரையில் 3 கட்டங்களாக சாலைகள் அமைக்க ரூ. 322 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன.

  கோபிசெட்டிபாளையம் பகுதி மக்களுக்கு இன்னும் 25 ஆண்டுகளுக்கு குடிநீா் தட்டுப்பாடே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் பகுதியில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

  தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு முதியோா் உதவித் தொகை வழங்க முதல்வா் ஆணை பிறப்பித்துள்ளாா் என்றாா்.

  பேட்டியின்போது, திருப்பூா் முன்னாள் மக்களவை உறுப்பினா் சத்யபாமா, நம்பியூா் அதிமுக ஒன்றியச் செயலாளா் தம்பி சுப்பிரமணியம் ஆகியோா் உடனிருந்தனா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai