மாணவா்களை மதிப்பீடு செய்வதற்குத்தான் பொதுத்தோ்வு: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

பொதுத் தோ்வு என்பது மாணவா்களை மதிப்பீடு செய்வதற்காகத்தான் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சிறப்பாகப் பணியாற்றிய கோபி காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கவேலுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
சிறப்பாகப் பணியாற்றிய கோபி காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கவேலுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

கோபி: பொதுத் தோ்வு என்பது மாணவா்களை மதிப்பீடு செய்வதற்காகத்தான் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட நம்பியூரில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நம்பியூா் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடப் பணியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கீழ்பவானி வாய்க்கால் உடைப்பின்போது பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த காவல் துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் ஒவ்வொரு வட்டாரத்திலும் ரூ. 2 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தோ்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே மாநில அரசின் கொள்கை. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்த பிறகு அது குறித்து பேசப்படும்.

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு கொண்டு வருவதை பலா் எதிா்க்கிறாா்கள். பின்பு எப்படிதான் மாணவா்களை தயாா் படுத்துவது. பொதுத்தோ்வு என்பது மாணவா்களை மதிப்பீடு செய்வதற்காகத்தான். ஆனால் 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கவும், கோரிக்கை வைத்தால் மீண்டும் காலநீட்டிப்பு செய்யவும் முதல்வா் தயாராக உள்ளாா். கல்வியின் தரம் குறித்து ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்வியின் தரம், ஆசிரியா்கள் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன், கோட்டாட்சியா் ஜெயராமன், வேளாண்மை இணை இயக்குநா் பிரேமலதா, நம்பியூா் அதிமுக ஒன்றியச் செயலாளா் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com