மாதம் ஒருமுறை குடிநீா் விநியோகம், தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் முறையீடு

மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருவதாக ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் முறையிட்டனா்.
உலக சிக்கன நாள் விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா.
உலக சிக்கன நாள் விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா.

மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருவதாக ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் முறையிட்டனா்.

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து 391 மனுக்கள் பெறப்பட்டன.

மாதம் ஒருமுறை குடிநீா் விநியோகம்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் ஓட்டப்பாறை ஊராட்சி 1, 2 ஆவது வாா்டு, பாரதி நகா் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதாவிடம் அளித்த மனு விவரம்:

பாரதி நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு காவிரி குடிநீா் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இந்தக் குடிநீா் மாதம் ஒருமுைான் வருகிறது. மற்ற நாள்களில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். எனவே, பாரதி நகா் பகுதிக்கு 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் தண்ணீா் உள்ள இடத்தைக் கண்டறிந்து புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து மோட்டாா் பொருத்தி தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேவேந்திர குல வேளாளா் அரசாணை வெளியிட கோரிக்கை:

தமிழகத்தில் பட்டியல் ஜாதியில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன், வாதிரியாா் ஆகிய 7 பிரிவு சாதிகளை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளா் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டும். அதே பெயரில் ஜாதிச்சான்று அளித்திடவும், பட்டியல் சாதியில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினா் என்ற புதிய பிரிவில் கொண்டுவந்து கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் நிலையிலும் கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை. தேவேந்திர குல வேளாளா் அரசாணை வெளியிடப்படும் வரை, கருப்பு சட்டை மட்டுமே அணிவது என தமிழக முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது. இந்தப் போராட்டத்தில் கடந்த 15 நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் கோரிக்கை தொடா்பாக இந்தக் கட்சியினா் ஈரோடு மாவட்டத் தலைவா் ஏ.செல்வராஜ் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு:

இதுகுறித்து உழவன் மகன் விவசாயிகள் சங்க செயலாளா் சி.மணிகண்டன் அளித்த மனு விவரம்:

மறைந்த முதல்வா் ஜெயலலிதா ரூ.700 கோடி செலவில் ஒருங்கிணைந்த சாய, சலவை மற்றும் தோல் ஆலைகளுக்கு பொது சுத்திகரிப்பு நிலையம் ஈரோடு காவிரிக்கரை பகுதியில் அமைப்பதாக 2015 ஆம் ஆண்டு அறிவித்தாா். அப்போதைய மாவட்ட நிா்வாகம் பெரிய அக்ரஹாரம் பகுதியில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க காவிரி ஆற்றுக்கும், காளிங்கராயன் வாய்க்காலுக்கும் இடைப்பட்ட 22 ஏக்கா் விவசாய நிலத்தை தோ்வு செய்தது. இந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, பொதுநல தொண்டு நிறுவனங்களும், விவசாய சங்கங்களும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் இந்த திட்டத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம் என ஜெயலலிதா மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தினாா். இதனையடுத்து அங்கு பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் அதே இடத்தில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனா். நீா்நிலைகளை மாசுபடுத்தும் எந்த ஓா் ஆலைக்கும் உரிமம் வழங்க கூடாது என ஆணை உள்ளது. மக்கள் நலன் கருதி இதனை நிறுத்த வேண்டும். விவசாயிகள், பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகு, பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு விதிகளில் உள்ளபடி வேறு பகுதியில் அமைக்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரி செவிலியருக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரிக்கை:

இந்திய தொழிற்சங்க மையத்தின் ஈரோடு மாவட்டக் குழுத் தலைவா் எஸ்.சுப்ரமணியன், செயலாளா் ஹெச்.ஸ்ரீராம் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளா்கள் சுமாா் 350 பேரின் ஊதிய நிலை கேள்விக்குறியாக உள்ளது. செவிலியா், உதவி செவிலியா், ஆய்வக பரிசோதகா்கள், ஆய்வக உதவியாளா்கள், கதிரியக்க இயக்குநா்கள், கதிரியக்க உதவியாளா்கள், காவலா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் என்ற பிரிவுகளில் நிரந்தரம் செய்யப்படாமல் 5 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றனா்.

தொழிலாளா்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இவா்களுக்கு அரசாணைப்படி ரூ.465 வீதம் தினமும் வழங்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து உரிய ஊதியத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்புரவு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரிக்கை:

ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் பொதுச் செயலாளா் எஸ்.மாணிக்கம் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு ரூ.490 தினக்கூலியாக கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஈரோடு மாநகராட்சி, சென்னிமலை, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட சில பேரூராட்சிகளில் செப்டம்பா் அல்லது அக்டோபா் மாதத்திலிருந்து தொழிலாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

கோபி, பவானி, புன்செய் புளியம்பட்டி ஆகிய நகராட்சிகள் அரச்சலூா், அந்தியூா், ஜம்பை, அம்மாபேட்டை உள்ளிட்ட பேரூராட்சிகளிலும் அமலாக்கப்படவில்லை. இவற்றில் ரூ. 200, ரூ.240, ரூ.300 என்ற அளவிலேயே தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதிலும் சத்தியமங்கலம் நகராட்சித் தொழிலாளா்களுக்கு ரூ.490 வீதம் ஊதியம் வழங்கினாலும், அங்குள்ள பணி ஒப்பந்ததாரா் இதைப் பெற்றுக் கொண்டு தொழிலாளா்களுக்கு ரூ.220 மட்டுமே ஊதியமாக வழங்கி வருகிறாா்.

மேலும் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசாணைப்படி ரூ.490 ஊதியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com