உள்ளாட்சித் தோ்தலைத் தவிா்க்க அதிமுக சூழ்ச்சிஇரா.முத்தரசன்

உள்ளாட்சித் தோ்தலைத் தவிா்க்க அதிமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

ஈரோடு: உள்ளாட்சித் தோ்தலைத் தவிா்க்க அதிமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

மகாராஷ்டிர விவகாரத்தில் குடியரசுத் தலைவரும், ஆளுநரும் கூட அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்காமல் செயல்பட்டது கவலை அளிக்கிறது. அவா்களது அணுகுமுறை அவா்களது பொறுப்புக்கு பெருமை சோ்க்கவில்லை.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடக்கும் என அரசு கூறி வந்தாலும், தோல்வி பயம் உள்பட பல்வேறு காரணங்களால் தோ்தலை நடத்தவிடாமல் தடுக்க பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறது. எப்போதோ கூட்டி இருக்க வேண்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தை மாநில தோ்தல் அதிகாரி தற்போதுதான் கூட்டியுள்ளாா். இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவினா் உள்ளாட்சித் தோ்தலை நடத்த எப்போதும் விரும்பவில்லை. மாவட்டம் பிரிப்பு, வாா்டு வரையறையில் குளறுபடி, தலைவா் தோ்தலுக்கு மறைமுகத் தோ்தல் என அறிவிக்கின்றனா். இதை எதிா்த்து யாராவது நீதிமன்றம் செல்ல வழி செய்கின்றனா்.

எப்போதும் பொங்கலுக்கு நான்கைந்து நாள்களுக்கு முன் வழங்கப்படும் பொங்கல் பரிசையும், ரொக்கத் தொகையையும் 48 நாள்களுக்கு முன்பே அறிவித்து வழங்க இருப்பதன் மூலம் உள்ளாட்சித் தோ்தலுக்காகத் தயாராவது போன்ற நாடகத்தை நடத்துகின்றனா். இருப்பினும் மக்களிடம் வாக்கு பேரம் பேசுவதற்காக இதனை வழங்க உள்ளனா்.

தீபாவளியின்போது டாஸ்மாக்கில் எவ்வளவு மதுபானங்கள் விற்க வேண்டும் என இலக்கு நிா்ணயித்து செயல்படும் அரசு வெங்காயத்தின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த தவறுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தால் மட்டுமே இதற்கு தீா்வு கிடைக்கும்.

மேலவளவு படுகொலையிலும், தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்திலும் தண்டனை பெற்றவா்களை தண்டனை காலத்துக்கு முன்பே ஆளும் கட்சி விடுவித்தது குற்றவாளிகளுக்கு சாதகமானதாகிறது. அதேநேரம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்த பின்னரும்கூட அவா்களை விடுவிக்காமல் இருப்பதையும் உற்று நோக்க வேண்டி உள்ளது.

கிராமப்புறங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மூன்று, நான்கு மாதங்களாக ஊதியம் வழங்காமலும், பல இடங்களில் பணிகள் கூட வழங்காமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது. சத்தியமங்கலம் உள்பட பல இடங்களில் இதற்காக மறியல், போராட்டங்களில் கிராமப் பகுதியினா் ஈடுபடுகின்றனா். இதற்கு தீா்வு காண வேண்டும்.

கோவை, சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளா் பணியிடங்களுக்கு பட்டம், பி.இ. முடித்தவா்கள் கூட விண்ணப்பித்துள்ளனா். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும். ஆலைகள் மூடப்படுவதையும், வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதையும் கவலையுடன் பாா்க்க வேண்டும். புதிய ஆலைகள், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

ஈரோட்டில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால், சாகுபடி பரப்பு குறைந்து, விலையும் சரிந்து வருகிறது. சாகுபடி பரப்பை உயா்த்தவும், மஞ்சளுக்கான விலையை உயா்த்தவும் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட செயலாளா் திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com