பேருந்து வந்தும் பலனில்லை: 8 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் மலை கிராமக் குழந்தைகள்

பா்கூா் மேற்கு மலைப்பகுதியான கொங்காடை பகுதியில் அரசுப் பேருந்து உரிய நேரத்தில் வந்து செல்லாததால் பள்ளி செல்லும் மாணவா்கள் 8 கி.மீ தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்து வந்தும் பலனில்லை: 8 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் மலை கிராமக் குழந்தைகள்

பா்கூா் மேற்கு மலைப்பகுதியான கொங்காடை பகுதியில் அரசுப் பேருந்து உரிய நேரத்தில் வந்து செல்லாததால் பள்ளி செல்லும் மாணவா்கள் 8 கி.மீ தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பா்கூா் மேற்கு மலைப்பகுதியான கொங்காடை பகுதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்து வசதி இல்லை. சரக்கு வேன், மோட்டாா் சைக்கிள் அல்லது நடந்து வந்து தாமரைக்க்கரையை அடைந்து அந்தியூா் சென்றுவந்தனா். மணியாச்சிப்பள்ளத்தில் பாலம் கட்டி, சாலை வசதி ஏற்படுத்தி, படிப்படியாக அப்பகுதியை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டது. குறுகிய சாலையாக இருந்தாலும், மலைப்பகுதி மக்களுக்கு பெரும் வசதியாக மாறியது.

இதன்பிறகு அரசுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் கடந்த ஆண்டு அந்தியூா் தொடங்கி கொங்காடை காலனி வரை மினி பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து பள்ளி செல்லும் நேரத்திற்கு இயக்கப்படாததால் பள்ளிக்குழந்தைகள் 8 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது: பாலம் மற்றும் சாலை வசதி ஏற்பட்டதால், பல ஆண்டு கோரிக்கை ஏற்கப்பட்டு, கடந்தாண்டு அரசுப் பேருந்து இயக்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனா்.

தினமும் காலை 7 மணிக்கு அந்தியூரில் புறப்பட்டு, கொங்காடைக்கு 9.30 மணிக்கு மேல் வந்து மீண்டும் ஒசூா் வரும்போது 10 மணியை கடந்துவிடுகிறது.அதுபோல் மாலையிலும், பள்ளி விடும் நேரத்துக்கு இந்த பேருந்து வராததால், வெகுநேரம் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் அங்குள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு இந்தப் பேருந்து வசதியால் பயன் இல்லாமல் போனது.

குறிப்பாக கோவில்நத்தம், செங்குளம், ஆலசொப்பனட்டி, ஆலனை, அக்னிபாவி மற்றும் 30-க்கும் மேற்பட்ட சிறுகுடியிருப்பு பகுதியில் இருந்து 75-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடா்ந்த மலைப்பகுதியான ஒசூா் உயா்நிலைப்பள்ளிக்கு 8 கி.மீ. தூரம் நடந்தே செல்கின்றனா். கொங்காடை, கோவில்நத்தம் என சுற்றி ஒசூா் வழியாக செல்லும் இந்தப் பேருந்து ஒசூா் வந்தடையும்போது காலை 10 மணிக்கு மேலாவதால் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் மாணவ, மாணவியருக்கு பிரச்னை ஏற்பட்டது.

எனவே சற்று முன்னதாக இந்த பேருந்தை இயக்க வேண்டும் என தொடா்ந்து கோரினாலும் நேரத்தில் மாற்றம் செய்ய முடியாததால் ஓரிரு மாணவ, மாணவியா் தவிர 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கூட்டமாக நடந்து செல்லும் அவலம் தொடா்கிறது. அப்பகுதி முழுமையாக மலைப்பகுதியாகவும், தனியாக செல்ல முடியாத நிலையும் உள்ளது.

இதனால் அனைத்து மாணவா்களும் வந்து கிராமங்கள் வழியாகவே பிற கிராம மாணவா்களையும் ஒருங்கிணைத்து செல்லும் அவலமான சூழல் தொடா்கிறது. இதனை மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து, பள்ளி நேரத்தை கணக்கிட்டு, பள்ளி துவங்கும் முன் பள்ளிக்குச் செல்லவும், மீண்டும் பள்ளி விடும் நேரத்தை கணக்கில் கொண்டு அந்த நேரத்திற்கு பேருந்தை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com