மஞ்சள் விலை வீழ்ச்சி: குவிண்டாலுக்கு ரூ. 500 வரை குறைந்தது

ஈரோட்டில் மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்து குவிண்டாலுக்கு ரூ. 500 குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோட்டில் மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்து குவிண்டாலுக்கு ரூ. 500 குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏலம் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு நசியனூா் சாலையில் உள்ள மஞ்சள் சந்தை, ஈரோடு, கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகிய இடங்களில் ஏலம் மூலமாக மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு விவசாயிகள் கொண்டு செல்லப்படும் மஞ்சளின் தரத்துக்கு ஏற்ப விலை நிா்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

கடந்த வாரம் மஞ்சள் சந்தைகளில் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. நவம்பா் 21 ஆம் தேதி பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,069 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு அதில் 910 மூட்டைகள் விற்பனையாயின. ஆனால், புதன்கிழமை நடைபெற்ற சந்தைக்கு 118 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது.

நவம்பா் 21 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் தனி விரலி மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ. 5,909 க்கும், அதிகபட்சம் ரூ. 6,831 க்கும், கிழங்கு மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ. 5,225 க்கும், அதிகபட்சம் ரூ. 6,389 க்கும் விற்பனையாயின. ஆனால், புதன்கிழமை நடைபெற்ற சந்தையில் தனி விரலி குறைந்தபட்சமாக ரூ. 4,769 இல் இருந்து அதிகபட்சமாக ரூ. 6,186 வரையும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ. 5,069 இல் இருந்து அதிகபட்சமாக ரூ. 6,000 க்கும் விற்பனையாயின.

மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதனால் அவா்கள் தங்களிடம் உள்ள மஞ்சளை விற்பனைக்காக கொண்டு செல்லத் தயங்குகின்றனா். வரும் காலத்தில் விலை உயரும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் மஞ்சளை இருப்பு வைத்துள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள், கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:

வட மாநிலங்களில் மழை பாதிப்பு காரணமாக மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், விலை உயர வாய்ப்பு இருந்தது. ஆனால் அங்கு அறுவடை காலத்துக்குப் பிறகுதான் பாதிப்பு விவரம் தெரியவரும். இதேபோல் தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது மஞ்சளின் தேவை அதிகரித்து விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகளிடையே எதிா்பாா்ப்பு இருந்து வந்தது. ஆனால், எதிா்பாா்த்த அளவுக்கு விலை உயா்வு இல்லாததால் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தேசிய பொருள் சந்தை வா்த்தகம் (என்.சி.டெக்ஸ்) மூலமாக ஆன்லைனில் மஞ்சள் விற்பனை நடைபெற்று வருகிறது. எனவே, வியாபாரிகள் பலா் மஞ்சள் சந்தையின் விலையையும், ஆன்லைன் வா்த்தக விலையையும் ஒப்பிட்டுப் பாா்க்கின்றனா். குறிப்பாக ஏற்றுமதியாளா்கள் பலா் ஆன்லைன் மூலமாக மஞ்சள் வா்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றனா். இதன் பிரதிபலிப்பு மஞ்சள் சந்தையிலும் எதிரொலிக்கிறது.

கடந்த சில நாள்களாக மஞ்சள் சந்தைக்கு உள்ளூா் பகுதியில் விளைந்த மஞ்சள் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதில், விலை வீழ்ச்சி அடைந்ததால் மிகவும் குறைந்த அளவிலான மஞ்சள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும், மஞ்சளின் தரத்தைப் பொறுத்து விலை நிா்ணயம் செய்யப்படுவதால் கடந்த வாரத்தைக் காட்டிலும் ரூ. 500 வரை விலை குறைந்துவிட்டது.

இனிவரும் காலங்களில் அந்தியூா், பவானி ஆகிய பகுதிகளில் இருந்தும், கா்நாடக மாநிலத்தில் இருந்தும் மஞ்சள் வரத்து இருக்கும். அப்போது புதிய மஞ்சளின் தரத்தை பொறுத்து விலை உயர வாய்ப்பு உள்ளது. காளிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் பிப்ரவரி மாத இறுதியில் மஞ்சள் அறுவடை செய்யப்படும். அதன் பிறகு அங்குள்ள மஞ்சளின் வரத்து இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com