ஆயுத பூஜை: ஈரோட்டில் பொரி உற்பத்திப் பணி தீவிரம் கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட விலைக்கே விற்பனை

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ஈரோட்டில் பொரி உற்பத்திப் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
பொரி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.
பொரி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ஈரோட்டில் பொரி உற்பத்திப் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஈரப்பதம் பாதிப்பால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிா்க்க கடந்த ஆண்டு விற்ற விலைக்கே இந்த ஆண்டும் விற்பதாக பொரி வியாபாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த நாளில் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அந்த பூஜைகளில் முதன்மையான பொருளாக பொரி வைத்து பூஜை செய்யப்படும். இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள்களே இருப்பதால் பொரி தயாரிக்கும் பணியில் உற்பத்தியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த பொரி உற்பத்தியாளா் ராமச்சந்திரன் கூறியதாவது: பொரி உற்பத்திக்குத் தேவையான அரிசி கா்நாடக மாநிலத்தில் விளைகிறது. இரண்டு லிட்டா் அளவு, ஒரு பக்கா என பொரி அளவீடு செய்யப்படுகிறது. ஒரு மூட்டையில் 55 பக்கா பொரி இருக்கும். ஏறத்தாழ 7 கிலோ எடை இருக்கும். ஒரு காலத்தில் பொரி உணவில் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது பல வகை உணவுப்பொருள் வருகையால் பொரி பயன்பாடு குறைந்துள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு பிரதானமாக உள்ளதால் வழக்கமான அளவைவிட இருமடங்கு கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது.

கா்நாடக மாநிலத்தில் பருவமழை தாமதமாக பெய்ததால், அங்கு நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து கடந்த ஆண்டைவிட தற்போது குவிண்டாலுக்கு ரூ. 200 முதல் ரூ. 350 வரை விலை அதிகரித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் உற்பத்தி செய்த பொரி, ஈரப்பதம் ஆகிவிடும் என்பதால் வாடிக்கையாளா்களின் நலன் கருதி கடந்த ஆண்டு விற்பனை செய்த விலைக்கே பொரியை விற்பனை செய்கிறோம்.

மூட்டை ரூ. 520 முதல் ரூ. 550 வரை விற்பனை செய்கிறோம். ஈரோடு பகுதியில் தயாரிக்கும் பொரி முழுக்க முழுக்க கையாலும், ரசாயனம் சோ்க்காமலும் தயாரிக்கப்படுவதால் குறைந்தது 3 மாதம் கெட்டுப் போகாமலிருக்கும். நாங்கள் தயாரிக்கும் பொரியை ஈரோடு, பவானி, அந்தியூா், நத்தக்காடையூா், பெருந்துறை, திருப்பூா் போன்ற பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com