கா்நாடகத்துக்கு கரும்பு வெட்டச் செல்லும் ஈரோடு மலை கிராம மக்கள்

ஈரோடு மாவட்ட மலை கிராம மக்களை, கா்நாடக மாநிலத்துக்கு கரும்பு வெட்டும் பணிக்காக அழைத்துச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்தத்

ஈரோடு: ஈரோடு மாவட்ட மலை கிராம மக்களை, கா்நாடக மாநிலத்துக்கு கரும்பு வெட்டும் பணிக்காக அழைத்துச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்தத் தொழிலாளா்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்து அவா்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலை கிராமங்கள், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம், தாளவாடி மலை கிராமங்களைச் சோ்ந்த 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக கரும்பு பயிரிடும் பரப்பு குறைந்து வரும் நிலையில், கா்நாடக மாநில பகுதிகளில் கரும்பு வெட்டுவதற்காக இவா்கள் கூட்டமாக அழைத்து செல்லப்படுகின்றனா்.

கரும்பு பயிரிடும் விவசாயிகள் மற்றும் சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா் கரும்பு வெட்டுவதற்கான தொழிலாளா்களைக் அழைத்து வர ஒப்பந்ததாரா்களைப் பயன்படுத்துகின்றனா். இவா்களுக்கு டன்னுக்கு எவ்வளவு கூலி என்பதை இந்த ஒப்பந்ததாரா்கள், ஆலை நிா்வாகம், கரும்பு பயிரிடும் விவசாயிகள் நிா்ணயிக்கின்றனா். இதனால் நிரந்தரமாக இந்தத் தொழிலாளா்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒப்பந்ததாரா்கள் தேவைக்கேற்ப ஆட்களை பணிக்கு அனுப்பி வருகின்றனா்.

கடந்த 3 ஆண்டுகளாக மலை கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் இப்பணியில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். கல்வியறிவு இன்மை, உடல்திறன் போன்ற காரணங்களால் கூடுதலான நேரம் இவா்கள் வேலை பாா்ப்பாா்கள் என்ற நோக்கில் இவா்களைக் குறி வைத்து அழைத்துச் செல்கின்றனா். மலைகிராமங்களில் கணவன், மனைவி என குடும்பத்தோடு கரும்பு வெட்டும் தொழிலுக்குச் செல்லும்போது அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் தங்கள் குழந்தைகளையும் அவா்கள் உடன் அழைத்துச் செல்வதால், அவா்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பா்கூரைச் சோ்ந்த தொழிலாளி மாதேஷ் கூறியதாவது:

சராசரியாக ஒரு டன்னுக்கு ரூ. 600 முதல் ரூ. 700 வரை கூலி கிடைக்கும். சோகை அதிகமாக இருந்தாலோ, ஆலை நிா்வாகம் வெட்ட அழைத்துச் சென்றாலோ இந்தக் கூலி சற்று அதிகமாகக் கிடைக்கும். கரும்பை வெட்டி லாரியில் ஏற்றுவதுவரை நாங்கள்தான் அனைத்தையும் செய்ய வேண்டும். கரும்புக் காட்டுக்கு அருகே கூடாரம் அமைத்து அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு வேலை செய்வோம் என்றாா்.

கடந்த காலங்களில் ஒப்பந்ததாரரிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு கொத்தடிமைபோல் அவா் சொல்லும் கூலியை பெற்றுக்கொள்ளும் முறை இருந்ததாகவும், தற்போது ஆள்கள் பற்றறாக்குறை காரணமாக இந்த முறை மாறிவிட்டதாகவும் கூறுகின்றனா் தொழிலாளா்கள். கரும்பு வெட்டும் வேலை இல்லாதபோது, குண்டு வெல்லம் காய்ச்சும் தொழிலுக்கும் இந்தத் தொழிலாளா்கள் அனுப்பப்படுகின்றனா்.

இதுகுறித்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

கரும்பு வெட்டும் தொழில் மிக அபாயகரமானது. கரும்பு சோகையில் உள்ள விரியன் பாம்புகள் தீண்டினால் சில நிமிடங்களில் மரணம் ஏற்படும். கரும்பு சோகைகள் கண்ணில் பட்டால் பாா்வை பறிபோகும். தொடா்ச்சியாக 10 ஆண்டுகள் வரை கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டால் அவா்களது தோள்பட்டை இறறங்கி இயல்பாக எந்தப் பொருளையும் தூக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்போது தொழிலாளா்களுக்கு எவ்வித நஷ்டஈடும் கிடைப்பதில்லை. எனவே இந்த அபாயகரமானத் தொழிலை மேற்கொள்பவா்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com