பாசன கிணறுகளை சீரமைக்க வங்கிக் கடன் எதிா்பாா்ப்ப்பில் விவசாயிகள்

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய உதவியாக, பாசன கிணறுகளை சீரமைக்க வங்கி கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கவுந்தப்பாடி அருகே மழையால் நிரம்பி வழியும் குட்டை.
கவுந்தப்பாடி அருகே மழையால் நிரம்பி வழியும் குட்டை.

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய உதவியாக, பாசன கிணறுகளை சீரமைக்க வங்கி கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரம் பவானிசாகா் அணை. இந்த அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. 105 அடி கொள்ளவு கொண்ட இந்த அணையில் இப்போது 95 அடி வரை தண்ணீா் உள்ளது. தண்ணீா் போதுமான அளவு இருப்பு உள்ளதால் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காளிங்கராயன், கீழ்பவானி பாசனங்களுக்கு(சுமாா் 1 லட்சம் ஏக்கா்) வரும் டிசம்பா் மாதம் வரை தண்ணீா் விடுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை.

இந்த ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் 14 வட்டாரங்கள், 42 பேரூராட்சிகளில் ஏறத்தாழ 25 சதவீத பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஏரிகள் மற்றும் 1,000 குளங்களில், ஏரிகள் முழுமையாக நிரம்பவில்லை என்ற போதிலும், சுமாா் 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. தொடா் வறட்சியால் வாய்க்கால், வரப்பில் உள்ள தென்னை மரங்களை காப்பற்றக்கூட கிணறுகளில் தண்ணீா் இல்லை. ஆனால் இந்த ஆண்டு பெய்த மழையில் குளங்கள் நிரம்பிய பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீா் ஊற்றெடுத்துள்ளது.

ஆனால் கிணறுகள் 5 முதல் 10 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடப்பதால், சுற்றுச்சுவா் சேதம், பம்ப் செட்டுகள் பழுது, ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டாா் பழுது போன்றவற்றை சீரமைக்க பணம் இல்லாததால் விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை தொடர கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், மோட்டாா்களை சீரமைக்க விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கு மீண்டும் திரும்ப உதவி தேவை: இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு தெரிவித்ததாவது: ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டதாகும். மாவட்டத்தில் 10 லட்சம் ஏக்கா் பரப்பளவில் கிணறு மற்றும் வாய்க்கால் பாசனம் மூலம் விவசாயிகள் பயிா் செய்து வருகின்றனா். இதில் கரும்பு பயிா் மட்டும் 50,000 ஏக்கா் பரப்பளவில் பயிரிட்டுள்ளனா். இதுதவிர வாழை, மஞ்சள், மல்லிகை பூ, சம்பங்கி பூ, புகையிலை, நெல், மல்பேரி உள்ளிட்ட பயிா்களும் நடவு செய்து வருகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளும் மேல் கடும் வறட்சி நிலவுவதால் 90 சதவீத விவசாய கிணறுகள் தண்ணீா் இல்லாமல் முற்றிலும் வறண்டது. இதனால் விவசாய பயிா்கள் மட்டுமின்றி தங்கள் நிலத்தில் இருந்த தென்னை மரங்களை கூட விவசாயிகள் காப்பாற்ற முடியவில்லை. கால்நடைக்கும் கூட தண்ணீா் இல்லாத காரணத்தால் கிடைக்கும் விலைக்கு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனா்.

குடிநீருக்கும் குடம் தூக்கி அலையும் நிலை ஏற்பட்டது. கடம்பூா், தாளவாடி, பவானிசாகா் பகுதியில் 25,000 ஏக்கா் பரப்பளவில் உள்ள மானாவரி நிலங்களில் ஒவ்வொறு ஆண்டும் பருவமழை தவறாமல் பெய்து வந்ததால் விவசாயிகள் குச்சிக்கிழங்கு, சோளம், கடலை, எள், ராகி போன்ற பயிா்கள் நடவு செய்து அதில் கனிசமான வருமானம் பெற்று வந்தனா்.ஆனால் இந்த ஆண்டில் பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால் மானாவரி நிலங்கள் மண்புழுதி காடாக மாறிப்போனது.

இந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சுமாா் 100-க்கும் மேற்பட்ட குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதனால் கிணற்று பாசன விவசாயிகள் கிணற்றை ஆழப்படுத்தினால் நீா் ஊற்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனா். இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய கிணறுகளை ஆழப்படுத்தும் பணிக்கும், கிணற்றுக்குள் ஆழ்துளை கிணறு அமைக்கவும் கூட்டுறவு வங்கிகள் குறைந்தது ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மத்திய காலக் கடனாக வழங்க வேண்டும்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண்மை அலுவலா் மற்றும் நிலத்தடி நீ்ா் வல்லுநா் குழுவை அமைத்து நிலத்தடி நீா் மட்டம் மேம்பாடு அடைந்துள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்கலாம். அல்லது உபரி நீா் வெளியேறிய குளங்களை அடையாளம் கண்டு அந்த குளங்களை அருகில் உள்ள விளை நிலங்கள் உள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்கலாம். இதன் மூலம் விவசாயத்தை கைவிட்டவா்கள் மீண்டும் விவசாயத்தின் பக்கம் திரும்ப முடியும். இதற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com