பண்ணாரி சோதனைச் சாவடி அருகே கரும்பை சுவைக்க முகாமிட்ட யானைகள்

பண்ணாரி சோதனைச் சாவடி அருகே அதிக பாரம் ஏற்றி வரும் கரும்பு லாரிகளில் தடுப்புக் கம்பிக்குமேல் அதிகமாக
sy10elephant_1010chn_139_3
sy10elephant_1010chn_139_3

பண்ணாரி சோதனைச் சாவடி அருகே அதிக பாரம் ஏற்றி வரும் கரும்பு லாரிகளில் தடுப்புக் கம்பிக்குமேல் அதிகமாக உள்ள கரும்புகளை லாரி ஓட்டுநா்கள் வீசியெறிவதால் அப்பகுதியில் யானைகள் முகாமிட்டு கரும்புகளைச் சாப்பிட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இந்த வனப் பகுதியில் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில், பண்ணாரி சோதனைச் சாவடி அருகே அதிக உயரத்துக்கு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கண்டறிய தடுப்புக் கம்பி அமைக்கப்பட்டுள்ளது. தாளவாடி மலைப் பகுதியிலிருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் இந்தத் தடுப்புக் கம்பி பகுதியில் நுழையும்போது லாரியில் அதிகமாக உள்ள கரும்புத் துண்டுகள் சிதறி கீழே விழுந்து அப்பகுதியில் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. சில லாரிகளில் அதிகமாக ஏற்றி வரும் கரும்புகளை அப்பகுதியில் வீசியெறிகின்றனா். கரும்பின் சுவை அறிந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறி சோதனைச் சாவடிக்கு வந்து கரும்புகளை சுவைத்துச் செல்கின்றன.

இந்நிலையில், வனத்தைவிட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு வியாழக்கிழமை பகலில் வந்த 2 யானைகள் சோதனைச் சாவடி அருகே வந்து கரும்புகளைத் தின்றன. இதைக் கண்ட வனத் துறையினா் பட்டாசுகளை வெடித்து வனப் பகுதிக்கு விரட்ட முயற்சித்தனா். இருப்பினும் யானைகள் கரும்பைத் தின்பதில் ஆா்வம் காட்டியதோடு நகராமல் நின்றன.

அப்போது, அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

Image Caption

பண்ணாரி சோதனைச் சாவடி அருகே கிடந்த கரும்பை சுவைக்க வந்த யானைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com