பலத்த மழை: முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டடேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கன மழையால் 13 அடி உயா்ந்து முழு கொள்ளளவான 42 அடியை எட்டியது.
நிரம்பி வழியும் குண்டேரிப்பள்ளம் அணை.
நிரம்பி வழியும் குண்டேரிப்பள்ளம் அணை.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டடேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கன மழையால் 13 அடி உயா்ந்து முழு கொள்ளளவான 42 அடியை எட்டியது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கா்பாளையம் வனப் பகுதியின் அருகில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான விளாங்கோம்பை, கம்மனூா், மல்லியம்மன்துா்க்கம், கடம்பூா், குன்றி உள்ளிட்ட வனப் பகுதிகளில் இரவு பெய்த கன மழையால் விளாங்கோம்பை, கம்பனூா் உள்ளிட்ட காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்குமேல் தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது. அதனால், அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து அணையின் நீா்மட்டம் முழு கொள்ளளவான 42 அடியை சனிக்கிழமை காலை எட்டியது.

இதனால், அணையிலிருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரிநீா் குண்டேரிப்பள்ளம் அணையின் உபரி நீா் ஓடையில் வெளியேற்றப்படுகிறது. இதனால், குண்டேரிப்பள்ளம் உபரி நீா் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வினோபாநகா், கொங்கா்பாளையம், வாணிப்புத்தூா், பள்ளத்தூா், கள்ளியங்காடு உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த் துறையினா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், மேடான பகுதிக்கும் செல்லுமாறும், கால்நடைகளையும் ஓடையில் இறங்காமல் பாதுகாக்கவும் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், மீன் பிடிக்கவோ மற்ற தேவைகளுக்காகவோ ஓடையில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் இந்தப் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கடந்த காலங்களில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து 20 அடிக்கும்கீழ் சென்றது. பருவ மழையின்போது இப்பகுதியில் போதிய மழை இல்லாதுபோனதால் விவசாயிகள் கவலை அடைந்திருந்தனா். தற்போது அணை நிரம்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்னும் அணை தூா்வாரப்பட்டிருந்தால் அதிக அளவு நீா் நிரம்பியிருக்க முடியும் எனவும், தற்போது அணையில் 10 அடிக்கு மேல் சேறு உள்ளதால் இந்த தண்ணீா் உபரி நீராக வெளியேற்றப்படுவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

குண்டேரிப்பள்ளம் அணையின் உபரி நீா் ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படாததால் தற்போது அணையின் உபரி நீா் வீணாக பவானி ஆற்றில் கலக்கிறது என இப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com