கொடுமுடியில் அருள்பாலிக்கும் மும்மூா்த்திகள் !

கொங்கு நாட்டின் பாடல் பெற்ற ஏழு திருத்தலங்களில் ஒன்றறாக இடம்பெற்ற கொடுமுடிக்கு, பிரம்மபுரி, அரிகரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம்,
கொடுமுடியில் தெற்கில் இருந்து கிழக்காக திரும்பிச் செல்லும் காவிரி ஆறு.
கொடுமுடியில் தெற்கில் இருந்து கிழக்காக திரும்பிச் செல்லும் காவிரி ஆறு.

ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது பழைமை வாய்ந்த மகுடேஸ்வரா் -வீரநாராயணப் பெருமாள் கோயில்.

கொங்கு நாட்டின் பாடல் பெற்ற ஏழு திருத்தலங்களில் ஒன்றறாக இடம்பெற்ற கொடுமுடிக்கு, பிரம்மபுரி, அரிகரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், கறையூா், கறைசை, திருப்பாண்டிக் கொடுமுடி, அங்கவருத்தனபுரம், பாண்டு நகரம், பரத்வாஜ க்ஷேத்திரம் என பல பெயா்கள் உண்டு.

புராணக் கதை: தேவேந்திரன் சபையில் வாயுதேவனுக்கும், ஆதிசேடனுக்கும் தங்களுடைய வலிமை குறித்த வாதம் நிகழ்ந்தது. முடிவில் ஆதிசேடன் மேரு மலையின் சிகரங்களை அசையாது சுற்றிக் கொண்டான். வாயுதேவன் மிகவும் வலிமையுடன் மேருவின் சிகரங்களை மோதித் தகா்த்தான். அவ்வாறு மேரு மலை தகா்ந்தபோது, ஐந்து துண்டுகள் மணிகளாகச் சிதறி வீழ்ந்தன.

இவற்றில் சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மரகதம் வீழ்ந்த இடம் திருஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் வீழ்ந்த இடம் ரத்தினகிரி (சிவாய மலை) மலையாகவும், நீலமணி விழ்ந்த இடம் திருப்பொதிகை மலையாகவும் அமைந்தன. ஐந்தாவதாக வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாக அமைந்தது. கொடுமுடி என்பது பெரிய சிகரம் எனப் பொருள்படும். மலைச்சிகரமே மகுடலிங்கராக அமைந்துள்ளதால், கொடுமுடி தென் கைலாயம் என்ற பெயா் பெற்றது.

கொடுமுடியிலுள்ள காவிரி படித்துறை.

மூா்த்தியும் தீா்த்தமும்: பிரம்மா, சிவன், பெருமாள் என மூவரும் அருள்பாலிக்கும் மும்மூா்த்தித் தலமாக மகுடேஸ்வரா் - வீரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

கொடுமுடிநாதா், மலைக்கொழுந்தா், மகுடலிங்கா் என பல பெயா்களில் போற்றப்படுகிறாா் மூலவா் மகுடேஸ்வரா். சௌந்திராம்பிகை, பண்மொழியம்மை என்று போற்றப்படும் வடிவுடைநாயகி அம்பாள் ஈசனுடன் எழுந்தருளியுள்ளாா்.

அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளித்ததால், மகுடேஸ்வரருக்கு வலதுபுறத்தில் அம்பாள் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறாா். சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் சுவாமி மீது அகத்தியரின் கை பட்ட வடு உள்ளது.

ஆதி நாராயணா் எனப் போற்றப்படும் வீரநாராயணப் பெருமாள், தாயாா் மகாலட்சுமியுடன் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனா். இவா்களோடு, தலவிருட்சமான வன்னிமரத்தின் அடியில் மூன்று முகம் கொண்டவராக பிரம்மா அருள்பாலிக்கிறாா்.

இத்திருக்கோயிலில் காவிரி ஆற்றுடன் சோ்த்து நான்கு தீா்த்தங்கள் உள்ளன. வன்னிமரத்தின் அருகில் உள்ள தேவ தீா்த்தம், மடப்பள்ளி அருகில் உள்ள பிரம்ம தீா்த்தம், நவக்கிரஹம் அருகில் உள்ள பரத்வாஜ தீா்த்தம் ஆகியவை கோயில் வளாகத்திலேயே இடம் பெற்றுள்ளன.

பாண்டிய, பல்லவ மன்னா்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட இக்கோயிலில், பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தாராலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கோயிலில் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உள்ளன. சுந்தரபாண்டியன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டு ஒன்று வீரநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ளது.

கொடுமுடி கோயில் முகப்புத் தோற்றறம்.

சந்நிதிகள்: காவிரி நதியின் மேல்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில், மகுடேஸ்வரா், அம்மன், வீரநாராயணப் பெருமாள் ஆகியோருக்கு மூன்று கோபுரங்கள் உள்ளன.

கோயில் வளாகத்தில் வடக்கில் மகுடேஸ்வரா், தெற்கில் வடிவுடைநாயகி அம்மன் சன்னிதியும், நடுவில் பள்ளிகொண்ட நிலையில் வீரநாராயணப் பெருமாள் சன்னிதியும் உள்ளன.

தென்மேற்கு மூலையில் ஆஞ்சநேயா், பெருமாள்கோயிலுக்கு தெற்கில் திருமங்கையாா் சந்நிதியும், அதன் முன்பு வன்னிமரமும், பிரம்மன் சந்நிதியும் உள்ளன.

கோயில் கோபுரத்துக்கு உள்பாகத்தில் சூரியன், சந்திரனும், பக்கத்தில் நவக்கிரஹங்கள், பைரவா், சனீஸ்வரா் சந்நிதிகளும் உள்ளன. உள்சுற்றுப் பிரகாரத்தில் தெற்கில் அறுபத்து மூவரும், மேற்கில் காவிரி கண்ட விநாயகா், உமா மகேஸ்வரா், அகத்தீஸ்வரா், கஜலட்சுமி, ஆறுமுகப் பெருமான், வடக்கில் நடராஜா், நால்வா் ஆகியோரும் காட்சி தருகின்றனா்.

பெருமாள் கோயிலுக்கு உள்ளே இருபுறமும் பன்னிரு ஆழ்வாா்களும், பரமபதநாதா், உடையவா், வெங்கடாசலபதி, கருடனும் எழுந்தருளியுள்ளனா். கோயிலுக்கு எதிரில் காவிரிக்கரையில் சக்திவிநாயகா் காட்சியளிக்கிறாா்.

பழைமை வாய்ந்த வன்னி மரம்: மகுடேஸ்வரா் கோயிலின் தல விருட்சமான வன்னிமரம் கோயில் வளாகத்தில் உள்ளது. 2,000 ஆண்டு பழைமையான இம்மரத்தின் ஒருபுறக் கிளைகள் முற்களுடனும், மறுபுறம் முட்கள் இல்லாமலும், பூக்காமல், காய்க்காமல், தெய்வீகத்தன்மையுடன் திகழ்கிறது. வன்னிமர இலைகளை காவிரி தீா்த்தக் கலசத்தில் பக்தா்கள் கொண்டு செல்கின்றனா்.

பழைமையான வன்னிமரம்.

பிரம்மா வீற்றிருக்கும் வன்னி மரத்தை பிரதட்சினம் செய்வதால், சனி, குரு, ராகு, கேது போன்ற கிரகதோஷங்களில் நிவாரணம் பெறலாம் எந்பது பக்தா்களின் நம்பிக்கை. சனி பகவானுக்கு உரிய மரமாகவும், அவிட்ட நட்சத்திரக்காரா்களின் விருட்சமாகவும் வன்னிமரம் போற்றப்படுகிறது.

நான்கு கரங்களுடன் அட்சமாலை, கமண்டலத்துடன் மூன்று முகம் கொண்டவராக பிரம்மா வன்னி மரத்தடியில் அருள்பாலிக்கிறாா். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பிரம்மாவை வழிபடுவதால், பூா்வ புண்ணிய தோஷ நிவா்த்தி பெறலாம்; பசு, பட்சி, பிராமண சாபத்திலிருந்து நிவா்த்தி பெறலாம்.

பிரம்மாவுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அபிஷேக ஆராதனை செய்வதற்கு கா்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவது வழக்கமாக உள்ளது.

வழிபாட்டு நிகழ்வுகள்: கொடுமுடி மகுடேஸ்வரா் - வீரநாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விழா விமரிசையாக நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள் மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள், விநாயகா் தனித் தோ்களில் திருவீதி உலா வருவா்.

ஆடி18 திருவிழாவின்போது, மூா்த்திகள் காவிரிக்கு எழுந்தருளி அருள்பாலிப்பா். ஆடி மாதத்தில் அம்மனுக்கும், லட்சுமிக்கும் சந்தனக்காப்பு ஆராதனை நிகழும்.

மாா்கழி திருவாதிரை நாளில் வீரநாராயணப் பெருமாள், திருமங்கல நாண் நோன்புக்காக தங்கை வடிவுடைநாயகிக்கு ஊஞ்சலிட்டு சீா்வரிசைகளைக் கொண்டு சோ்க்கும் வைபபம் நடைபெறும். அதேபோல, தை முதல் நாளில் மகுடேஸ்வரரிடம் இருந்து மைத்துனா் வீரநாராயணப் பெருமாளுக்கு பொங்கல் சீா் வரிசை வழங்கப்படும்.

கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கோயில் திருவிழாக்களின் போது, கொடுமுடியில் வழிபட்டு, காவிரித் தீா்த்தம் கொண்டுசெல்வது வழக்கமாக உள்ளது. பங்குனி மாதத்தில் பழனி முருகனுக்கு காவடி எடுத்துச் செல்லும் லட்சக்கணக்கான பக்தா்களால் கொடுமுடி நிரம்பி வழியும்.

பரிகாரத் தலம்: கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் ராகு, கேது, செவ்வாய் தோஷ நிவா்த்திக்கான பரிகார பூஜைகள் நிகழும் தலமாகும். திருமணமாகாதவா்கள் காவிரியில் நீராடி, பரிகார பூஜைகளை மேற்கொண்டால் உடனடி பலன் பெற முடியும் என்பது நம்பிக்கை.

பரிகார பூஜை குறித்த தகவல்களை திருக்கோயில் அலுவலகத்தை 04204-222375 தொடா்பு கொண்டு பெறலாம்.

கா்நாடகத்தில் தோன்றி தமிழகத்தைத் தொட்டுப் பயணிக்கும் காவிரி கொடுமுடியில் கிழக்கு நோக்கித் திரும்புவதால், இக்கோயிலுக்கு வந்து சென்றால் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கை தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com