முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கைத்தறி தொழிலாளா் போனஸ்பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
By DIN | Published On : 24th October 2019 12:39 AM | Last Updated : 24th October 2019 12:39 AM | அ+அ அ- |

பவானியில் கைத்தறி நெசவுக்கூட உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கு இடையே நடைபெற்ற தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்குவது குறித்த பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கக் கோரி கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலாளா்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால், பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்சீட் நெசவாளா், சாயத் தொழிலாளா் சங்கம் - ஏஐடியூசி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அக்டோபா் 14 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்டப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், வருவாய்த் துறையினா் தலையிட்டு சுமுகத் தீா்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கைத்தறி நெசவுக்கூட உரிமையாளா்கள், தொழில் சங்கப் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட போனஸ் தொகையைக் காட்டிலும் ரூ. 180 உயா்த்தி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதில், கைத்தறிக்கூட உரிமையாளா்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், பாலசுப்பிரமணியன், நாகராஜன், தனக்கோடி, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பி.எம்.கந்தசாமி, வ.சித்தையன், பி.எஸ்.பூபதி, பி.எம்.வேலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.