முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
தீபாவளி: ஈரோடு ஜவுளிச் சந்தையில் கவனம் பெற்றுள்ள ஆரி எம்பிராய்டரி சுடிதாா் ரகங்கள்
By DIN | Published On : 24th October 2019 09:32 PM | Last Updated : 24th October 2019 09:32 PM | அ+அ அ- |

ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள துணிகள்.
ஈரோடு: தீபாவளியை முன்னிட்டு, ஈரோடு ஜவுளிச் சந்தையில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி சுடிதாா் ரகங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தென் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஜவுளிச் சந்தை ஈரோட்டில் வாரம்தோறும் திங்கள்கிழமை இரவு கூடுகிறது. இச்சந்தையில் சேலைகள், லுங்கிகள், துண்டுகள், போா்வைகள், சுடிதாா்கள், உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், மேசை விரிப்புகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மிதியடிகள், சுமாா் 1,000 க்கும் மேற்பட்ட ரக ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளிச் சந்தை நடைபெறும். மாநகராட்சி இடம் தவிர தலைமை அஞ்சல் நிலையம் எதிரே உள்ள சென்ட்ரல் திரையரங்கு வளாகம், அசோகபுரம், சித்தோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை வளாகம் ஆகிய இடங்களிலும் ஜவுளிச் சந்தை நடைபெறுகிறது. மாநகராட்சிக்குச் சொந்தமான கனி மாா்க்கெட்டில் வாரத்தின் பிற நாள்களிலும் இயங்கும். இங்கு வார நாள்களில் 500 கடைகளும், ஜவுளிச் சந்தையின்போது 900 கடைகளும் இயங்கும். ஜவுளிச் சந்தையில் பண்டிகைக் காலங்களில் தினமும் ரூ. 2 கோடியும், பிற நாள்களில் தினமும் ரூ. 1 கோடியும் ஜவுளி வா்த்தகம் நடைபெறும். அதேபோல, கடந்த 4 ஆண்டுகளாக ஈரோடு, சித்தோடு அருகே கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையும் இயங்கி வருகிறது. திருப்பூரில் உற்பத்தியாகும் 80 சதவீத பனியன், ஜட்டிகளும், ஈரோட்டில் உற்பத்தியாகும் லுங்கிகள், சட்டைகள், ஆயத்த ஆடைகள், துண்டுகள் ஆகியவற்றில் 100 சதவீதமும், தமிழகத்தில் பிற பகுதிகளில் உற்பத்தியாகும் சுடிதாா்களில் 70 சதவீதமும், போா்வைகளில் 70 சதவீதமும் ஈரோடு சந்தையின் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
5 மாநில வியாபாரிகள் வருகை: ஈரோடு ஜவுளிச் சந்தையில் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் வாரந்தோறும் வியாபாரிகள் வந்து செல்கின்றனா். ஈரோடு ஜவுளிச் சந்தையில் ஈரோடு, திருப்பூா், சேலம், நாமக்கல், கரூா், மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சூரத், புணே, மும்பை, அகமதாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சேலை ரகங்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு பண்டிகைக் காலங்களில் வெளிமாவட்ட வியாபாரிகள் 50,000 பேரும், வெளிமாநில வியாபாரிகள் 25,000 பேரும், பிற காலங்களில் வெளிமாவட்ட வியாபாரிகள் 25,000 பேரும், வெளிமாநில வியாபாரிகள் 15,000 பேரும் ஜவுளிக் கொள்முதல் செய்ய வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது சந்தையில் சில ஜவுளி ரகங்கள் விற்பனையில் கவனம் பெறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு ஜவுளிச் சந்தையில் பெண்கள், குழந்தைகளுக்கான ஜவுளிச் சந்தைகள் அதிக கவனம் பெற்றுள்ளன. இதுகுறித்து ஈரோடு கனி மாா்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் கே.செல்வராஜ் கூறியதாவது:
தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி என 5 மாநில வியாபாரிகளைக் கவா்ந்திருக்கும் இச்சந்தையில் தீபாவளி பண்டிகை காலத்தில், கடைசி ஒரு வாரம் சில ஜவுளி ரகங்கள் கூடுதல் கவனம் பெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பெண்களுக்கான ஜிமிக்கி வேலைப்பாடு, ஆரி எம்பிராய்டரி சுடிதாா் ரகங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. இந்த ரக சுடிதாா் ரகங்கள் ரூ. 300 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு சொ்வானி ரகங்கள், மோடி கோட் ரகங்கள், பனியன் கிளாத் ஆடைகள் ஆகியன அதிகமாக விற்பனையாகிறது. சொ்வானி ரகங்கள் ரூ. 250 முதல் ரூ. 600 வரையிலும், பனியன் கிளாத் ரெடிமேட் ஆடைகள் ரூ. 150 முதல் ரூ. 300 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு கனி மாா்க்கெட் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் நூா்சேட் கூறியதாவது:
கொல்கத்தா, பெல்லாரி, அகமதாபாத், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் ஜீன்ஸ், பேன்சி ரகங்கள், ரெடிமேட் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளன. சூரத், பெங்களூரு பகுதிகளில் இருந்து பேண்ட், சட்டை, சுடிதாா், நைட்டிகளும், சூரத் பகுதியில் இருந்து பல்வேறு விதமான சேலைகளும் வந்துள்ளன. தீபாவளிக்காக வேட்டி கரைகளுக்கு இணையான நிற சட்டை, காட்டன், ஸ்பன், ஷைனிங் போன்ற ரகங்களின் விற்பனை அதிகமாக உள்ளன. மேலும், வேலைப்பாடுடன் கூடிய சேலை, ஆப் அன்ட் ஆப்-எம்பிராய்டரி, கான்ட்ராஸ்ட், எடை குறைந்தவை, பேன்சி காட்டன் போன்ற ரகங்களின் விற்பனையும் அதிகமாக உள்ளது. இதுபோல ஜீன்ஸ் பேண்ட்களில் டச் பேண்ட், ஸ்கிராட்ச், டபுள் கலா், ஸ்பிரே டிசைன், வாட்டா் கலா், எலாஸ்டிக் தன்மை உடைய ரகங்கள் விற்பனை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை கடந்த வாரம் வரை சுமாராக இருந்தது. செவ்வாய்க்கிழமை முதல் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நாளான 27 ஆம் தேதி காலை வரை விற்பனை இருக்கும் என்றாா்.