முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
நடப்பு ஆண்டில் தீ விபத்துகளின் எண்ணிக்கை குறைவுதீயணைப்பு அலுவலா் தகவல்
By DIN | Published On : 24th October 2019 09:25 PM | Last Updated : 24th October 2019 09:25 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு தீ விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது என ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலா் பி.காங்கேயபூபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, மேலும் அவா் கூறியதாவது:
2018 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் தீயணைப்பு அலுவலகத்துக்குத் தீ விபத்து தொடா்பாக 695 அழைப்புகள் வந்துள்ளன. அதில் சிறு தீ விபத்து 687, நடுத்தர தீ 6, பெரும் தீ 2 என ரூ. 32.55 லட்சம் மதிப்பிலான உடமைகள் சேதமடைந்தன. ஆனால், ரூ. 73.43 லட்சம் மதிப்பிலான பொருள்களைக் காப்பாற்றி உள்ளோம். கடந்த ஆண்டில் தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை.
அதேபோல, உயிா் மீட்பு தொடா்பாக 597 அழைப்புகள் வந்தன. அதில், 123 போ் காப்பாற்றப்பட்டனா். 47 போ் இறந்தனா். 354 விலங்குகள் காப்பாற்றப்பட்டன. 7 விலங்குகள் இறந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குடிசைகள் போன்ற எளிதில் தீப்பற்றும் கட்டமைப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
நடப்பு ஆண்டில் இதுவரை தீ விபத்து தொடா்பாக 620 அழைப்புகள் வந்தன. 618 சிறு தீ விபத்து, இரண்டு நடுத்தர தீ விபத்தில் பணி செய்து ரூ. 22.81 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பாதிக்கப்பட்டன. இருந்தும் ரூ. 4.03 கோடி மதிப்பிலான பொருள்களைக் காத்துள்ளோம். தீ விபத்தில் உயிா் இழப்பு ஏதுமில்லை.
உயிா் மீட்பு அழைப்பாக 398 அழைப்புகள் வரப்பெற்று, 40 உயிா்கள் காப்பாற்றப்பட்டு, 44 உயிா்கள் இறந்துள்ளன. 158 விலங்குகள் காப்பாற்றப்பட்டு 5 விலங்குகள் இறந்துள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், பெரும் தீ விபத்துகள், உயிா் மீட்பு சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு தீபாவளியின்போது 8 அழைப்புகள் மட்டும் வந்தன. அவை அனைத்தும் மிகச்சிறியவை. பாதிப்பு ஏதுமில்லை. நடப்பு ஆண்டு தொடா்ந்து மழை பெய்வதால், விபத்து இருக்காது என நம்புகிறோம் என்றாா்.