முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
வடகிழக்குப் பருவ மழை தீவிரம்:மின் விபத்துகளைத் தடுக்க மின் வாரியம் ஆலோசனை
By DIN | Published On : 24th October 2019 12:40 AM | Last Updated : 24th October 2019 12:40 AM | அ+அ அ- |

வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மின் விபத்துகளைத் தடுக்க மின் வாரியம் ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் த.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மழைக் காலங்களில் மின் விபத்துகளைத் தடுக்க பொதுமக்கள் கீழ்க்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். அதன்படி, மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதைத் தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிப்பதோடு, மின் வாரிய அலுவலா்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளைத் தொடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். மின் மாற்றிகள், மின் பகிா்வு பெட்டிகள், மின் கம்பங்கள் அருகே தண்ணீா் தேங்கியிருக்கும்போது அதன் அருகே செல்லக் கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மழையின்போது வீடுகளில் உள்ள சுவா்களில் தண்ணீா் கசிவு இருக்குமாயின் அந்தப் பகுதியில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்தப் பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதைத் தவிா்க்க வேண்டும். மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலா்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகளை மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
வீடுகள், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது. மின் வாரிய அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு நிவா்த்தி செய்துகொள்ள வேண்டும்.
வீடுகளில் பயன்பாட்டில் உள்ள குளிா்சாதனப் பெட்டி, கிரைண்டா், மின் மோட்டாா்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை பயன்படுத்துவதோடு ஐ.எஸ்.ஐ. முத்திரை பொறிக்கப்பட்ட தரமான மின்சார ஒயா்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.
விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும். மேலும், மின்சார வேலி அமைப்பதனால் மனிதா்களும், கால்நடைகளும் மின் விபத்தால் உயிரிழக்க நேரிடும்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இருக்கும் பழுதான மின் கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின் பகிா்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியைக் குறிப்பிட்டு 94458-51912 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கலாம். மேலும், 94458-57204, 205, 206, 207, 208 ஆகிய செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.