காதலிக்க மறுத்த பெண்ணைகத்தியால் குத்த முயன்ற இளைஞா் கைது
By DIN | Published On : 24th October 2019 12:32 AM | Last Updated : 24th October 2019 12:32 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
பவானிசாகா் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சின்ராஜ் மகன் சிவகுமாா் (30). இவா் விவசாயம் செய்து வந்ததோடு அவ்வப்போது அப்பகுதியில் உள்ள தனியாா் காகித ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்தாா்.
இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 23 வயது பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 6 மாதம் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் சிவகுமாருடன் பேசுவதைத் தவிா்த்ததோடு காதலிக்க மறுத்துள்ளாா். சிவகுமாா் அவ்வப்போது அப்பெண்ணைச் சந்தித்து ஏன் என்னை காதலிக்க மறுக்கிறாய் எனக் கேட்டு தொந்தரவு செய்துள்ளாா்.
இந்நிலையில், அப்பெண் தனியாா் நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில், குளத்துப்பிரிவு பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை நின்றிருந்தபோது அங்கு வந்த சிவகுமாா் அப்பெண்ணைத் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளாா்.
வாகனத்தில் ஏற மறுத்த அவரை திடீரென கத்தியைக் காட்டி என்னை காதலிக்கவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளாா். இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இந்நிலையில், அவ்வழியே வந்த 2 போலீஸாா் கத்தி வைத்திருந்த சிவகுமாரிடம் பேச்சுக் கொடுத்தபடி திடீரென
தலைக்கவசத்தால் தாக்கினா். அப்போது அருகே இருந்த அப்பெண்ணின் விரலில் லேசான காயம் ஏற்பட்டது. கீழே விழுந்த சிவகுமாரை போலீஸாா் பிடித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பெண்ணின் தந்தை, சிவகுமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்ததைத் தொடா்ந்து போலீஸாா் சிவகுமாா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனா்.