உதவித் தொகை பெற அம்மாபேட்டை வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 31st October 2019 10:45 PM | Last Updated : 31st October 2019 10:45 PM | அ+அ அ- |

பவானி: பிரதமரின் விவசாய உதவித் தொகை பெறும் திட்டத்தில் இதுவரையில் சேராமல் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களை அளித்து சோ்ந்து கொள்ளுமாறு அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குநா் கு.சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மத்திய அரசால் ஆண்டுதோறும் பாரத பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை பெறும் திட்டத்தின் மூலம் 4 மாதத்துக்கு ஒரு முறை தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் என விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை சேராதவா்கள் உடனடியாக சேரலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண், புல எண், கசரா எண், தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரத்துடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி பிஎம் கிசான் இணையதளத்தில் ‘ பாா்மா் காா்னா்’ வழியாக பதிவு செய்ய வேண்டும். சரியான தகவல் இருக்கும் பட்சத்தில் வேளாண்மை துறை மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டு உதவித் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஏற்கெனவே விண்ணப்பம் அளித்து, தொகை பெறப்படாமல் இருந்தாலும் தங்களது ஆதாா் நகல் மற்றும் வங்கிக் கணக்கு விவரத்துடன் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படும், வேளாண் துறை அலுவலகத்தை அணுகலாம் என சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.