1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பவானியில் பறிமுதல்
By DIN | Published On : 02nd September 2019 05:06 AM | Last Updated : 02nd September 2019 05:06 AM | அ+அ அ- |

பவானி நகராட்சிப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பவானி நகராட்சிப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள், உணவகங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், குவளைகள் உள்பட 1,500 கிலோ பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், தடையை மீறி விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது.
நகராட்சிப் பகுதியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது, விற்பனை செய்வது போன்றவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.