சுடச்சுட

  

  பாறு கழுகுகளைப் பாதுகாக்க ஐந்தாண்டு திட்டம்: தலைமை வனப் பாதுகாவலர் வி.நாகநாதன்

  By DIN  |   Published on : 12th September 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாறு கழுகுகளை அழிவில் இருந்து தடுக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஐந்தாண்டு திட்டம் தயாரித்துள்ளோம் என தலைமை வனப் பாதுகாவலர் வி.நாகநாதன் தெரிவித்தார். 
  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் சார்பில் "பாறு கழுகுகள் செழித்தல்' என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார்.
  சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்குநர், தலைமை வனப் பாதுகாவலர் வி.நாகநாதன் முன்னிலை வகித்துப் பேசியதாவது:
  நம் நாட்டில் கடந்த காலங்களில் கழுகுகள் ஊருக்குள் பறந்து திரிந்தன. இவை இறந்த உயிரினங்களை உண்டு வாழ்ந்து வந்தன. தற்போது, நகர மயமாதலினால் ஊருக்குள் கழுகுகள் இல்லை. வனப்பகுதியில் மட்டும்தான் உள்ளன. உலகளவில் பெரும் கழுகள் 23 வகைகள் உள்ளன. ஆசியாவிலும், இந்தியாவிலும் 9 வகையான கழுகுகள் உள்ளன. இதில், சத்தியமங்கலம், முதுமலை வனப் பகுதியில் நீண்ட மூக்கு கழுகு, வெண் முதுகு கழுகு, செங்கழுத்து கழுகு, வெள்ளைக்கழுகு என நான்கு வகை மட்டுமே உள்ளன. இந்த கழுகுகள் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்கும் உயிரினம். ஏதேனும் ஒரு உயிரினம் இறந்தால், அவற்றில் இருந்து நோய் கிருமி பரவாமல் தடுத்து, அவற்றை சாப்பிட்டு சுகாதார சீர்கேட்டை தடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் காணப்பட்ட கழுகுகள் அழிந்து தற்போது குறைந்தளவே உள்ளது. நம் காடுகளில் இயற்கையாகக் காணப்படும் கழுகுகளும் உள்ளன. 
  முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியிலும் இயற்கையோடு வாழும் கழுகுகளின் எண்ணிக்கை குறித்து கடந்த மார்ச் மாதம் கணக்கெடுப்பு செய்தோம். அதில் வெண் முதுகு பாறு (கழுகு) 120, கருங்கழுத்து பாறு 21, செம்முக பாறு 21 இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், டைக்ளோ பிளாக் ஊசி மருந்தை உட்கொள்ளும் கால்நடைகள் இறந்தால் அவற்றை உண்ணும் கழுகுகள் இறந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மருந்து பயன்படுத்தவும், விற்கவும் தேசிய அளவில் தடை இருந்தும், சில வலி மருந்துகளில் இவை பயன்படுத்துவதால் கழுகுகள் அழிகின்றன. 
  காடுகள் தூய்மை பெற பாறு கழுகுகளை காப்போம் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த விழிப்புணர்வு மூலம் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அழிவைத் தடுக்கும் வகையில் ஐந்தாண்டு திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறோம் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai