திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: கோபி நகராட்சிக்கு ரூ. 18 ஆயிரம் வருவாய்

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் துவங்கிய இரு ஆண்டுகளில் மட்கும் குப்பையை அரைத்து உரமாக்கி விற்பனை

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் துவங்கிய இரு ஆண்டுகளில் மட்கும் குப்பையை அரைத்து உரமாக்கி விற்பனை செய்ததில் இதுவரை கோபி நகராட்சிக்கு ரூ. 18 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கோபி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் 30 வார்டுகளில் வீடு வாரியாக குப்பையைத் தரம் பிரித்து துப்புரவுப் பணியாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். தினமும் சேகரமாகும் குப்பையை அந்தந்த வீடு, வார்டுகளில் உரமாக்கப்படுகிறது. தவிர கரட்டூர் உரக்கிடங்கில் ரூ. 58.30 லட்சம் , ராமர் எக்ஸ்டென்சன் சுடுகாடு வளாகத்தில் ரூ. 60.80 மதிப்பில் நுண் உரம்  செயலாக்கம்  மையத்தில் குப்பை உரமாக்கும் பணி நடைபெறுகிறது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் துவங்கிய இரு ஆண்டுகளில் மக்கும் குப்பையை அரைத்ததில் 301 டன் உரம் கிடைத்துள்ளது. துவக்கத்தில் 150 டன் குப்பை உரத்தை நகராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது. நாளடைவில் குப்பை உரத்துக்கு விவசாயிகள் மத்தியில் கிராக்கி ஏற்பட்டது. இதனால், ஒரு டன் குப்பை உரம் ரூ. 150 விலையில் வழங்குவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதன்படி இதுவரை 120 டன் குப்பை உரத்தை தலா ரூ.150 இல் 15 விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளது. இன்னும் 30 டன் குப்பை உரம் நகராட்சி நிர்வாகம் கிடங்கில் இருப்பு வைத்துள்ளது. இதேபோல் மறு சுழற்சிக்கு உதவாத குப்பையை எரிபொருள் உபயோகத்துக்கு தொழிற்சாலைகளுக்கு நகராட்சி நிர்வாகம் இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி அரியலூர் சிமென்ட் தொழிற்சாலைக்கு 105 டன், ஈரோடு தொழிற்சாலைக்கு 35 டன் என மொத்தம் 140 டன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 30 டன் அளவுக்கு  மறுசுழற்சிக்கு உதவாத குப்பையை நகராட்சி நிர்வாகம் கையிருப்பு வைத்துள்ளது.
மறுசுழற்சிக்கு உதவாத குப்பையில் திருப்பூர் மண்டலத்திலேயே கோபி நகராட்சிதான்  அதிக அளவில் அழித்துள்ளது. அதேபோல் மக்கும் குப்பையை உரமாக்கி விற்பனை செய்ததில் அதிக  வருவாய் கோபி  நகராட்சிக்குதான் கிடைத்துள்ளது. மக்கும் குப்பை உரம் தேவைப்படும் விவசாயிகள் கோபி  நகராட்சியை அணுகலாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com