சுடச்சுட

  

  ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்கள்  வழங்குதல் தொடர்பாக வட்ட அளவிலான மக்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்ததாவது:
  பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதில் உள்ள குறைபாடுகள் குறித்தும், குடும்ப அட்டைகள் பெறுவது குறித்தும் உயர்நிலை அலுவலர்கள் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்திட உள்ளனர். இக்குறைதீர் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை காலை (செப்டம்பர் 14) 10 முதல் பகல் 1 மணி வரை  சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. இப்பணியை கண்காணித்திட மாவட்ட அளவிலான அலுவலர்கள் பார்வையாளர்களாக செயல்பட நியமிக்கப்பட்டுள்ளனர்.
  ஈரோடு வட்டத்தில் ஆட்டையாம்பாளையம் நியாயவிலைக்கடை, பெருந்துறை வட்டத்தில் கருக்குப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், பவானி வட்டத்தில் பெரியபுலியூர் ஊராட்சி அலுவலகம், கோபி வட்டத்தில் சவுண்டப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், சத்தியமங்கலம் வட்டத்தில் வெங்கநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும் கூட்டம் நடைபெறும். 
  இதுபோல் அந்தியூர் வட்டத்தில் சங்கராப்பாளையம் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளி வளாகம், மொடக்குறிச்சி வட்டத்தில் சென்னிபாளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கொடுமுடி வட்டத்தில் இச்சிபாளையம் நியாய விலைக்கடை வளாகம், தாளவாடி வட்டத்தில் இக்கலூர் வனத் துறை அலுவலகம், நம்பியூர் வட்டத்தில் காவிலிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும் கூட்டம் நடைபெறும். 
  கூட்டத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் சார் பதிவாளர், கூட்டுறவுச் சங்கச் செயலாளர், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.   எனவே, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் உள்ள குறைபாடுகள், புதிய குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பான கருத்துகளை வருகை தர உள்ள அலுவலர்களிடம் நேரில் தெரிவித்தும், மனுக்களை அளித்தும் அதற்கான தீர்வுகளைப் பெற்று பயன்பெறலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai