சுடச்சுட

  

  பள்ளி மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கி மூலம் சிறுசேமிப்புக் கணக்கு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

  By DIN  |   Published on : 13th September 2019 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவ, மாணவிகளிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்திடும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சிறு சேமிப்புக் கணக்கு துவங்கப்படவுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
  ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 38, 39 ஆவது பேரவைக் கூட்டம், வங்கியின் தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.  எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
  கூட்டுறவு இயக்கங்கள் வலிமை அடைந்த காரணத்தால்தான் தமிழகத்தில் கந்து வட்டி கொடுமை ஒழிந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கூட்டுறவு இயக்கங்கள் வலிமை பெற்றன.     ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2013 ஆம் ஆண்டில் நிர்வாகக்குழு பொறுப்பேற்றபோது ரூ. 1,038 கோடியாக இருந்த வைப்புத் தொகை ரூ. 862 கோடி உயர்ந்து இப்போது ரூ. 1,900 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வங்கி சதவீத அடிப்படையில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் பயிர்க்கடன் வழங்கியுள்ளது. மேலும், பயிர்க்கடன் அல்லாத மற்ற விவசாயம் சார்ந்த மத்திய காலக் கடன்களை மாநிலத்திலேயே அதிக அளவில் வழங்கி வருகிறது. 
  கறவை இனங்களுக்கு மத்திய கால கடன் வழங்கியதன் மூலம் 2017-18 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 2.92 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தியானது தற்போது 3.4 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பதற்கு இந்த வங்கி முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த நிதியாண்டில் பயிர்க் கடன் வழங்க ரூ. 800 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  2017-18 ஆம் ஆண்டில் செம்மறி, வெள்ளாடு வளர்ப்பதற்கு 1,210 நபர்களுக்கு ரூ. 10.39 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் பெற ஏதுவாக 7,223 நபர்களுக்கு கறவை இனங்கள், செம்மறி ஆடுகள் வாங்க நபார்டு வங்கியின் மூலம் மானியம் பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் தானிய ஈட்டு கடன் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
  நடப்பு ஆண்டில் பனையம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் புதியதாக தொடங்கப்பட்டு தற்போது மாவட்டத்தில் 228 சங்கங்களாக செயல்பட்டு வருகிறது. அரசு, பொது நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஊதிய அடிப்படையில் ரூ. 7 லட்சம் வரை 10.5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 
  சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு சிறு சேமிப்புக் கணக்கு துவங்கப்படவுள்ளது. மேலும், வங்கியின் மூலம் புதிய ஏ.டி.எம். கார்டுகள் வழங்குதல், புதிய ஏ.டி.எம். மையங்கள், புதிய சுய உதவிக்குழுக்கள், கிளைகள் நவீனமயமாக்குதல் போன்ற பல்வேறு வகையான வளர்ச்சிகளை நோக்கி மத்திய கூட்டுறவு வங்கியானது மேம்படுத்தப்படவுள்ளது. இந்த வங்கி அளித்த பயிர்க் கடன் 99.75 சதவீதமும், இதர கடன்கள் 96.05 சதவீதமும் முறையாகத் திருப்பி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வங்கியானது 2018-19 ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ. 25.57 கோடி லாபம் ஈட்டியுள்ளது. வறட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் நலன் கருதி ஆறுகளில் உள்ள உபரிநீரை கொண்டு ஏரி, குளங்களை நிரப்பும் திட்டப் பணியானது விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார். 
  விழாவில் ஆண்டறிக்கையை வெளியிட்ட அமைச்சர், பணியின்போது மரணமடைந்த 3 கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணியாளர் குடும்ப நல காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ. 6 லட்சத்துக்கான வரைவோலைகளை வழங்கினார்.
  கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத் தலைவர் கே.கே.காளியப்பன், கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.ஆர்.சந்திரசேகரன், மண்டல இணைப் பதிவாளர் பார்த்திபன், வங்கியின் மேலாண்மை இயக்குநர் எஸ்.ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai