சுடச்சுட

  

  பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: செப்டம்பர் 30க்குள் விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 13th September 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கே.பிரேமலதா தெரிவித்ததாவது:
  நடப்பு காரீப் பருவத்துக்கு பயிர்க் காப்பீடு செய்ய மக்காச்சோளம், துவரை, உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிர்கள் வருவாய் கிராம அளவிலும், ராகி, எள் ஆகிய பயிர்கள் பிர்க்கா அளவிலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, மா, கொய்யா ஆகிய பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமங்கள், பிர்க்காக்களின் விவரங்களை அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகித் தெரிந்து கொள்ளலாம். 
  வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாக இத்திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். பயிர்க் கடன் பெறா விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ வணிக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளலாம். வேளாண் பயிர்களை பொருத்தவரையில் நடப்பு காரீப் பருவத்தில் ஏக்கருக்கு மக்காச்சோளப் பயிருக்கு ரூ. 534, துவரை, உளுந்து பயிருக்கு ரூ. 315, நிலக்கடலை பயிருக்கு ரூ. 562, ராகி, எள் பயிருக்கு ரூ. 249 காப்பீடு கட்டணமாகச் செலுத்த வேண்டும். தோட்டக்கலைப் பயிர்களைப் பொருத்தவரையில் ஏக்கருக்கு வாழை பயிருக்கு ரூ. 4,070, மரவள்ளி பயிருக்கு ரூ. 1,675, வெங்காய பயிருக்கு ரூ. 1,908, மஞ்சள் பயிருக்கு ரூ. 3,685, முட்டைக்கோஸ் பயிருக்கு ரூ. 923,  உருளைக்கிழங்கு பயிருக்கு ரூ. 2,155, கொய்யாவுக்கு ரூ. 1,100, மா மரத்துக்கு ரூ. 1,015 காப்பீடு கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
  மக்காச்சோளம், துவரை, உளுந்து, நிலக்கடலை, ராகி, எள், வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, மா, கொய்யா ஆகிய பயிர்களுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி காப்பீட்டுத் தொகை செலுத்த கடைசி நாளாகும். இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில் இறுதி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் தவறாமல் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து காத்து பயனடையலாம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai